search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையா தப்பியோடிய விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்
    X

    விஜய் மல்லையா தப்பியோடிய விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை - காங்கிரஸ் வலியுறுத்தல்

    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடிய விவகாரத்தில் கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. #JaiveerShergill #VijayMallya
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் இருந்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி ஓடிய விவகாரம் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. நாட்டை விட்டு வெளியேறும்முன் அவர், நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்தது தொடர்பாக காங்கிரஸ், பா.ஜனதா இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு உள்ளது.

    இதைப்போல மல்லையாவுக்கு எதிராக சி.பி.ஐ. வெளியிட்ட ‘லுக் அவுட்’ நோட்டீஸ் திருத்தப்பட்ட விவகாரத்தையும் காங்கிரஸ் கட்சி தீவிரமாக எடுத்துள்ளது. ‘மல்லையாவை பார்த்தால் பிடித்து கொடுக்க வேண்டும்’ என்று விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ், பின்னர் அவர் வெளிநாடுகளுக்கு சென்றுவரும் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என திருத்தப்பட்டு இருந்தது.



    இந்த நோட்டீசை திருத்தியது, சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே.சர்மா என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘மல்லையாவின் லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி அவரை தப்பியோட அனுமதித்து இருக்கிறார், சி.பி.ஐ. இணை இயக்குனர் ஏ.கே.சர்மா. குஜராத் பிரிவு அதிகாரியான இவர்தான் சி.பி.ஐ.யில் பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி. இவர்தான் நிரவ்மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தப்பியோடும் திட்டத்துக்கான பொறுப்பாளர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் செர்ஜில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விஜய் மல்லையா தப்பியோடிய விவகாரத்தில் சி.பி.ஐ. இணை இயக்குனர் ஒருவரின் பங்களிப்பும் இருப்பது கண்டறியப்பட்டு உள்ள நிலையில், அரசு அல்லது விசாரணை நிறுவனங்களின் விசாரணையை நம்ப முடியாது. எனவே இந்த விவகாரத்தை கோர்ட்டு மேற்பார்வையின் கீழ் சுதந்திரமாக விசாரிக்க வேண்டும்.

    கடந்த 4 ஆண்டுகளில் வங்கி மோசடி தொடர்பாக 23 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ரூ.90 ஆயிரம் கோடி அளவுக்கு கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது. மோடி அரசின் மெத்தனத்தை பயன்படுத்தி 23 குற்றவாளிகள் தப்பியோடி இருக்கின்றனர்.

    மோடி அரசில் உள்ள யாரெல்லாம் இந்த குற்றவாளிகள் தப்புவதற்கு உடந்தையாக இருந்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். பொதுப்பணம் ரூ.90 ஆயிரம் கோடி கொள்ளையடிக்கப்பட்டது, அதில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியது அனைத்துக்கும் பிரதமரும், நிதி மந்திரியும் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு ஜெய்வீர் செர்ஜில் கூறினார்.   #JaiveerShergill #VijayMallya
    Next Story
    ×