search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்த பெண் மீது ஆசிட் வீச்சு - பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
    X

    நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்த பெண் மீது ஆசிட் வீச்சு - பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

    விவாகரத்து செய்த கணவரை மீண்டும் திருமணம் செய்வதில் உள்ள நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த பெண் பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளார். #Nikahhalala #ShabhnamRani
    புதுடெல்லி:

    இஸ்லாமிய பழக்கவழக்கங்களின்படி பழங்காலத்தில் இருந்து ஒரு நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது. அதாவது, இஸ்லாமிய தம்பதியர் ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பின்னர், மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் ‘ஷரீஅத்’ சட்டத்தின்படி அதற்கென தனி வழிமுறை இருப்பதாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    அதன்படி, விவாகரத்தான பெண் தனது முன்னாள் கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்டால், நேரடியாக அவருடன் சேர்ந்து வாழ முடியாது.

    அதற்கு முன்னதாக, இன்னொரு நபரை திருமணம் செய்துகொண்டு, அவருடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்துவிட்டு, பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு, விவாகரத்துக்கு பின்னர் 40 நாட்கள் ‘இத்தாத்’ என்னும் விதவைக்கோலம் பூண்டு, அதன் பின்னரே தான் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பும் முன்னாள் கணவரை முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்.

    ‘நிக்காஹ் ஹலாலா’ என்றழைக்கப்படும் இந்த நடைமுறையை இந்தியாவில் உள்ள தற்கால இஸ்லாமிய பெண்களில் பலர் மிக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    அவ்வகையில், தனது கணவரை எதிர்த்தும் நிக்காஹ் ஹலாலா முறையை எதிர்த்தும் டெல்லியை சேர்ந்த ஷப்னம் ராணி என்ற பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹ்ர் மாவட்டத்தை சேர்ந்த தனது கணவர் மீண்டும் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமானால் தனது சகோதரரை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டு வருமாறு நிர்பந்திப்பதாக மனுதாரரான ஷப்னம் ராணி குறிப்பிட்டிருந்தார்.


    இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தனது மாமனார் வீட்டுக்கு சமீபத்தில் சென்ற ஷப்னம் ராணி மீது அவரது மைத்துனர் ஆசிட் வீசி கொல்ல முயன்றதாகவும், தனக்கு பாதுகாப்பு கேட்டும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷப்னம் ராணி சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை  தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் நகல்களை மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநில அரசுக்கு அனுப்பி வைக்குமாறு ஷப்னம் ராணியின் வழக்கறிஞரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #Nikahhalala #ShabhnamRani
    Next Story
    ×