search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம் - உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதி கைது
    X

    விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டம் - உத்தரபிரதேசத்தில் பயங்கரவாதி கைது

    உத்தரபிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். #UttarPradesh #GaneshChatruthi #TerroristAttackPlan
    லக்னோ:

    வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா ஒரு வாரத்துக்கு மேல் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். உத்தரபிரதேச மாநிலத்திலும் நேற்று தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்நிலையில் அம்மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரின் சாகேரி பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதி காமர் உஸ்சாமா (வயது 37) என்பவரை தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

    அசாம் மாநிலத்தை சேர்ந்த அவரை கடந்த 10 நாட்களாக போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அவரது செல்போன் மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்து நேற்று கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதியை கைது செய்துள்ளதாக கூறிய டி.ஜி.பி. ஓ.பி.சிங், இதுபற்றி விரிவாக தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் டி.ஜி.பி. ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அவர் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானில் பயிற்சி பெற்று ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்தார். ஏற்கனவே 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை அவர் வெளிநாட்டிலேயே தங்கியிருந்தார். பி.ஏ. 3-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த அவர், கம்ப்யூட்டரை கையாளுவதில் திறமையானவராக இருந்தார்.

    சமூக வலைத்தளத்தில் தீவிரமாக செயல்பட்டுவந்த காமர், கடந்த ஏப்ரல் மாதம் ஏ.கே.47 துப்பாக்கியுடன் தனது புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. அன்று முதல் அவர் போலீசாரின் கண்காணிப்பில் இருந்தார்.

    தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் கான்பூர் போலீசார் உதவியுடன் தீவிரவாத தடுப்பு படையினர் அவரை கைது செய்தனர். பயங்கரவாத அமைப்புகளுடன் அவருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும், அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பது குறித்தும் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    அவர் கான்பூரில் ஏன் தங்கியிருந்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத ஒற்றுமையை குலைப்பதற்காக அவர் இங்கு தங்கியிருந்தாரா? அல்லது வேறு ஏதாவது திட்டத்துடன் இங்கு வந்தாரா? என தீவிர விசாரணை நடைபெறுகிறது.

    இவ்வாறு டி.ஜி.பி. சிங் கூறினார்.  #UttarPradesh #GaneshChatruthi #TerroristAttackPlan
    Next Story
    ×