search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு விமானப்படை தளபதி ஆதரவு
    X

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு விமானப்படை தளபதி ஆதரவு

    எதிர்க்கட்சிகளால் ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டு வரும் ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு விமானப்படை தளபதி தனோவா ஆதரவு தெரிவித்து உள்ளார். #RafaleDeal #Dhanoa
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடியில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 23-ந் தேதி மோடி அரசு கையெழுத்து போட்டது. இந்த விமானங்கள் அடுத்த ஆண்டு (2019) செப்டம்பர் முதல் இந்தியாவுக்கு வழங்கப்படும்.

    இந்த ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் விமானப்படைக்கு 126 போர் விமானங்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்குவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தன.



    இந்த நிலையில் வெறும் 36 ரபேல் விமானங்கள் வாங்கும் ரபேல் ஒப்பந்தத்தை, விமானப்படை தளபதி தனோவா வலுவாக ஆதரித்து உள்ளார். டெல்லியில் நேற்று நடந்த விமானப்படை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணுஆயுத பலம் வாய்ந்த 2 அண்டை நாடுகளிடம் இருந்து பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டு வந்த ஒரு காலத்தில், போதிய தாக்குதல் ரக விமானங்கள் இல்லாமல் இந்திய விமானப்படை தத்தளித்துக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த 36 ரபேல் போர் விமானங்களும், தற்போதைய சூழலில் சவால்களை எதிர்கொள்வதற்கான வலிமையை விமானப்படைக்கு வழங்கும்.

    விமானப்படைக்கு நவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக எப்போதெல்லாம் அரசு கருதுகிறதோ, அப்போதெல்லாம் சர்வதேச அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் அவரசமாக தளவாடங்களை வாங்குகிறது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற அவசரமான ஆயுத கொள்முதல்களை பலமுறை அரசுகள் மேற்கொண்டுள்ளன.

    சர்வதேச அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்த முறையில், வேகமாக கொள்முதல் நடைபெறுவதுடன், இந்திய விமானப்படை விரைவான செயல்பாட்டு வழிமுறையை அடையவும் முடியும்.

    ரபேல் விமானங்களை தவிர ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளும் மத்திய அரசு கொள்முதல் செய்கிறது. ரபேல் போர் விமானங்களும், எஸ்-400 ரக ஏவுகணைகளும் விமானப்படையை மேலும் வலுப்படுத்தும்.

    இவ்வாறு விமானப்படை தளபதி தனோவா கூறினார்.  #RafaleDeal #Dhanoa
    Next Story
    ×