search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மெகபூபா முப்தி அறிவிப்பு
    X

    காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக மெகபூபா முப்தி அறிவிப்பு

    தேசிய மாநாட்டு கட்சியை தொடர்ந்து காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார். #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் கடைசியாக நடைபெற்றன. இந்த தேர்தல்களில் சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.

    இதைதொடர்ந்து, 2016-ம் ஆண்டில் நடக்க வேண்டிய தேர்தல் அப்போது புர்ஹான் வானி என்னும் பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற பின்னர் ஏற்பட்ட கலவரம், வன்முறை மற்றும் அமைதியின்மையால் ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது, அங்கு பதற்றம் தணிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில் வரும் அக்டோபர் முதல் தேதி முதல் ஐந்தாம் தேதிவரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் எட்டாம் தேதியில் தொடங்கி பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெறவுள்ளது.

    காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பிரிவினைவாதிகள் நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்களை புறக்கணிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

    இதேபோல், தேசிய மாநாட்டு கட்சியின் நிறுவனர் பரூக் அப்துல்லாவும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

    இந்நிலையில், காஷ்மீரில் உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி இன்று அறிவித்துள்ளார்.



    இதுதொடர்பாக, அக்கட்சியின் சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தை அவர் ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பாக அனுப்பி உள்ளார்.

    ‘சட்டப்பிரிவு 35-ஏ தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் சூழலில் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை பெருவாரியான மக்கள் விரும்பவில்லை என்பதால் இந்த வேளையில் நடத்தப்படும் தேர்தல்கள் ஜனநாயக அமைப்புகளின் நம்பகத்தன்மையை சீர்குலைத்து விடும்.

    இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்துவதை அரசு மறுபரிசீலனை செய்வதுடன் மக்களின் நம்பிக்கையை பெறத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எங்கள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.

    எனவே, இந்த தேர்தல்களை புறக்கணிப்பதாக எங்கள் கட்சியின் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என மெகபூபா முப்தி அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PDPboycott #Kashmirlocalbodypolls #MehboobaMufti

    Next Story
    ×