search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆபரேசன் தாமரை திட்டத்தால் கர்நாடகத்தில் மந்திரிகள்- எம்.எல்.ஏ.க்கள் கலக்கம்
    X

    ஆபரேசன் தாமரை திட்டத்தால் கர்நாடகத்தில் மந்திரிகள்- எம்.எல்.ஏ.க்கள் கலக்கம்

    கர்நாடகாவில் பா.ஜ.க. பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், தற்போதைய கூட்டணி அரசை கலைப்பதற்காகவும் ஆபரேசன் தாமரை என்ற திட்டத்தை கையில் எடுத்திருப்பதால் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் ஜே.டி.எஸ்.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜே.டி.எஸ். கட்சியை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வராவும் உள்ளனர்.

    இது தவிர இரு கட்சிகளையும் சேர்ந்த சிலர் மந்திரிகளாக உள்ளனர். இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடும் இருந்து வருகிறது. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா பாராளுமன்ற தேர்தலுக்காக ஆபரேசன் தாமரையை மீண்டும் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அதாவது முதல் கட்டமாக காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கட்சியில் அதிருப்தியில் உள்ள மூத்த தலைவர்களை பாரதிய ஜனதாவுக்கு இழுக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த 2 மாதங்களில் இருகட்சிகளில் இருந்தும் 5 மூத்த தலைவர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இதே போல் மந்திரி சபையில் இடம் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள இரு கட்சி எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க அவர் முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

    காங்கிரசில் உச்சத்தை தொட்டுள்ள கோஷ்டி பூசல் பாரதிய ஜனதாவின் ஆபரேசன் தாமரை ஆகியவற்றால் கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. எந்த நேரத்திலும் தங்களது வீடுகளுக்கு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்கும், சோதனைக்கும் வருவார்கள் என்ற கலக்கத்தில் உள்ளனர்.

    வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை மூலம் கர்நாடக அரசை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி புகார் கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-


    மத்திய பாரதிய ஜனதா அரசு எதிர் கட்சிகளை ஒடுக்குவதற்கும் சி.பி.ஐ. வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை பயன்படுத்துகிறது. கடந்த சட்டசபை தேர்தலின் போது இதே யுக்தியை பாரதிய ஜனதா பயன்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலின் போது அதே முறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.

    வருமான வரித்துறையை பயன்படுத்தி ஜே.டி.எஸ்.- காங்கிரஸ் கூட்டனி அரசை கலைப்பதற்கு பாரதிய ஜனதா முயற்சி செய்கிறது. கூட்டணி ஆட்சியை கலைத்து விட்டு மறுபடியும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எடியூரப்பாவின் லட்சியமாக இருக்கிறது.

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதே பாரதிய ஜனதாவின் நோக்கமாகும். அதை எதிர்க்கும் அனைத்து கட்சிகள் மீதும் சி.பி.ஐ., வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை கட்டவிழ்த்து விடப்படும் என்பதை நாங்களும் எதிர் பார்த்தோம்.

    எனவே பாரதிய ஜனதாவின் எத்தகைய சூழ்ச்சியையும் நாங்கள் எதிர்கொள்வோம். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் அவர்கள் தோல்வி அடைவார்கள்.

    கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் பாரதிய ஜனதா குதிரை பேரம் நடத்திய போது அதனை தடுத்தவர் டி.கே.சிவக்குமார்.

    கர்நாடக அரசு என் தலைமையில் கவிழாமல் சிறப்பாக செயல்பட அவர் பக்கபலமாக இருக்கிறார். அவரை பலி வாங்கும் நோக்கத்தோடு பாரதிய ஜனதா செயல்படுகிறது. அவரை கைது செய்யப் போவதாக வதந்தி பரவி வருகிறது. கர்நாடக அரசை பாரதிய ஜனதா கவிழ்த்தால் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ்-ஜே.டி.எஸ். கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஈடுபட கூடாது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா கூறி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரசில் சமீப காலமாக நிலவும் கருத்து வேறுபாடு அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும். மந்திரி சபையில் சுழற்சி முறையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ, கவிழ்க்கும் வகையிலோ செயல்படக்கூடாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஜே.டி.எஸ். கூட்டணி கர்நாடகாவில் 28 இடங்களிலும் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வரா காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், மந்திரி டி.கே.சிவகுமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

    வருமான வரித்துறை மூலம் பாரதிய ஜனதா மிரட்டி வருவதாக கர்நாடக நீர்ப்பாசன துறை மந்திரி டி.கே. சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா வருமான வரித்துறை சி.பி.ஐ., அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறார்கள். காங்கிரசாரின் வீடுகளில் சோதனை நடத்தும் அந்த அதிகாரிகள் பாரதிய ஜனதா கட்சியினரின் வீடுகளுக்கு போகவே மாட்டார்கள். வருமான வரித்துறை விவகாரத்தை சட்டப்படி எதிர் கொண்டு வருகிறேன். பாரதிய ஜனதாவின் இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். நான் கைதாவதாக பரவியுள்ள செய்தி தவறானது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×