search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் - அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா விடுத்த அழைப்பை நிராகரித்த இந்தியா
    X

    ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் - அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா விடுத்த அழைப்பை நிராகரித்த இந்தியா

    ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியா விடுத்த அழைப்பை ஆப்கானிஸ்தானைப் போலவே இந்தியாவும் நிராகரித்துள்ளது. #Taliban #peaceconference
    புதுடெல்லி :

    தலிபான்களைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் எனப்பட்ட தற்போதைய ரஷியா படையெடுத்ததற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவோடு உருவாக்கப்பட்ட ஒரு போர்ப்படை ஆகும். அப்போதயை  ஆப்கானிஸ்தான் ஆட்சிக்கு ஆதரவாக சோவியத் யூனியன் செல்வாக்கு செலுத்த முயன்றதால் பாகிஸ்தான் அதிர்ந்தது.

    இதனால், பாகிஸ்தானின் மதரசாக்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அமெரிக்காவின் துணையோடு ஆயுதப் பயிற்சி அளித்து சோவியத் யூனியன் படைகளை எதிர்த்துப் போரிடத் தயார் செய்தது பாகிஸ்தான் அரசு. அவர்களே பின்னாளில் தலிபான்களாக மாறினர்.



    தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பின்னர், 90-களில் அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் சிக்கி நாடு சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பிறகுதான் அமெரிக்காவிற்கு எதிரியாக மாறிப்போனது தலிபான் அமைப்பு.

    அப்போது முதலாக ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் தினம்தோறும் பாதுகாப்பு படையினருடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கும் போர் நிறுத்தங்களுக்கும் சம்மதிக்காமல் ரத்த வெறியுடனே தலிபான் பயங்கரவாதிகள் சுற்றித் திரிந்தனர். சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை மாஸ்கோவில் கூட்ட திட்டமிட்டள்ளது.



    இதற்கிடையே, ரஷியாவின் இந்த அமைதி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள் அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை பிரதிநிதியாக அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஆனால், இந்த கூட்டதில் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான்களுடனான பேச்சுவார்த்தை ஆப்கானிஸ்தானில் அரசின் தலைமையில் நடைபெறுவது தான் நல்லது, இதில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை  இந்தியா விரும்பவில்லை என வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

    ’எங்கள் தலைமையில் நாங்கள் அழைக்கும் அமைதி பேச்சுவார்தைக்கு தலிபான் அமைப்பு சம்மதிக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட தாலிபான் அமைப்புக்கு ரஷியா அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என கூறி இந்தியாவை போன்றே, ஆப்கானிஸ்தான் அரசும் ரஷியாவின் அழைப்பை ஏற்கெனவே நிராகரித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளதால் மாஸ்கோவில் இன்று நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தேதி குறிப்பிடாமல் ரஷியா ஒத்திவைத்து விட்டது.

    உள்நாட்டுப் போரால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள ஆபாக்னிஸ்தான் நாட்டுக்கு கடந்த 2002-ம் ஆண்டு முதல் நட்பின் அடிப்படையில் இந்தியா, மறுகட்டமைப்பு உதவிகளை செய்து வருகிறது. இந்த சமூக பொருளாதார உதவிகளுக்கு இதுவரை 2 பில்லியன் டாலர் தொகையை இந்தியா செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Afghanistan #Taliban #peaceconference
    Next Story
    ×