search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் சென்னை ரெயிலில் பயணிகளை தாக்கி கொள்ளை - 4 பேர் காயம்
    X

    உத்தரபிரதேசத்தில் சென்னை ரெயிலில் பயணிகளை தாக்கி கொள்ளை - 4 பேர் காயம்

    சென்னை ரெயிலில் பயணிகளை தாக்கி, துப்பாக்கி முனையில் பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #GangaKaveri #Express
    சித்ரகூட்:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து பீகார் மாநிலம் சாப்பிராவுக்கு கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் உத்தரபிரதேசத்தின் சித்ரகூட் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது.

    அங்குள்ள பன்காய் மற்றும் தப்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் திடீரென 12 கொள்ளையர்கள் புகுந்தனர். துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த அவர்கள், பயணிகளிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கொள்ளையர்களிடம் இருந்து தங்கள் பொருட்களை பாதுகாக்க முயன்றனர். இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்த பயணிகளை கொள்ளையர்கள் பலமாக தாக்கினர். சிலருக்கு கத்திக்குத்தும் விழுந்தது. இதில் 4 பயணிகள் காயமடைந்தனர். அதன்பிறகும் தங்கள் வெறியாட்டத்தை நிறுத்தாத கொள்ளையர்கள், அனைத்து பயணிகளிடமும் துப்பாக்கி முனையில் கைவரிசை காட்டினர்.

    இதைத்தொடர்ந்து அவர்கள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனே ரெயிலில் இருந்த பாதுகாப்பு போலீசார் அந்த பெட்டிகளுக்கு சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் அனைவரும் தாங்கள் பறித்துக்கொண்ட விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் பணத்துடன் ரெயிலில் இருந்து இறங்கி இருளில் தப்பி ஓடினர்.

    பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறபட்டு சென்றது. கொள்ளை சம்பவத்தில் காயமடைந்த பயணிகளுக்கு அலகாபாத் ரெயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் ஜா மேற்பார்வையின் கீழ் மூத்த அதிகாரிகளை கொண்ட தனிப்படை போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
    Next Story
    ×