search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை உறியடி திருவிழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
    X

    மும்பை உறியடி திருவிழாவில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையையொட்டி மும்பையில் இன்று நடைபெற்ற உறியடி திருவிழாவில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். #MumbaiDahiHandi #DahiHandicelebrations
    மும்பை:

    ஸ்ரீகிருஷ்ணனுக்கு வெண்ணெய் மிகவும் பிடித்தமானது என நினைத்து மக்கள் அதை கிருஷ்ணனுக்கு நிவேதனம் செய்கின்றனர். ஆனால் உண்மையில் கொடுங்கோல் மன்னனான கம்சன் மக்களுக்கு அதிக வரி விதித்தான். அந்த வரியைக் கட்டுவதற்காக மக்கள் வெண்ணெயை விற்கும் கட்டாயத்திற்குள்ளானார்கள். 

    தவறான முறையில் வரி விதித்து மக்களைத் துன்புறுத்தும் கம்சனிடமிருந்து மக்களைக் காப்பாற்றவே கண்ணன் வெண்ணெயைத் தின்பதும் அதை வாரி இறைப்பதுமான செயல்களைச் செய்தான். அவ்வாறு எதிர்த்துப் போராடும் குணத்தையும், அநீதியைப் பொறுத்துக் கொள்ளலாகாது என்ற பாடத்தையும் கற்பித்தான்.

    இதன் அடிப்படையில், கிருஷ்ண ஜெயந்தி அன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து நடு இரவில் பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தையோ அல்லது மறுநாள் காலை தயிர், வெண்ணெய் பால் போன்ற பலவிதமான பண்டங்களை மக்கள் உண்ணுவார்கள். 

    பிற்காலத்தில் கோகுலாஷ்டமிக்கு அடுத்த நாள் தயிர் நிறைந்த பானையை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு உடைப்பது வழக்கமாகி விட்டது. இதைத்தான் நம் ஊரில் உறியடித் திருவிழா என்று அழைக்கிறோம்.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று உறியடி திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன. உயரத்தில் தொங்கும் தயிர் பானையை கம்பால் அடித்து உடைப்பதற்கு வாலிபர்கள் ஒருவர் தோளின்மீது மற்றவர் ஏறி எட்டடுக்கு, பத்தடுக்கு மனித பிரமிடுகளாக மாறி உற்சாக மிகுதியில் இதில் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணிவரை கிடைத்த தகவலின்படி, தானே மற்றும் மும்பை பகுதியில் நடைபெற்ற உறியடி திருவிழாக்களில் 36 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களில் மும்பை சியோன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். மனித பிரமிடின் அடிப்பகுதியில் நின்றிருந்த அவர், காயமடைந்த பின்னர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அம்மருத்துவமனை கொண்டுவரப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    முன்னதாக, இதுபோன்ற உறியடி திருவிழாவுக்களுக்கு என பல்வேறு நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது. ஆனால், அவை முறையாக பின்பற்றப்படாததால் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அவ்வப்போது நிகழ்வது குறிப்பிடத்தக்கது. #MumbaiDahiHandi #DahiHandicelebrations
    Next Story
    ×