search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எலி காய்ச்சலுக்கு பலியான சமூகசேவகர்கள் குமாரி, சுரேஷ்.
    X
    எலி காய்ச்சலுக்கு பலியான சமூகசேவகர்கள் குமாரி, சுரேஷ்.

    கேரளாவில் மழை நிவாரண பணியில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் 2 பேர் எலி காய்ச்சலுக்கு பலி

    கேரளாவில் மழை நிவாரண பணியில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் 2 பேர் காய்ச்சல் காரணமாக பலியானதையடுத்து எலி காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது. #KeralaFloods #KeralaRatFever
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழையாக பெய்தது. இதனால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

    மழை தற்போது ஓய்ந்து விட்டாலும் மழை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னும் கேரள மக்கள் முழுமையாக மீண்டு வரவில்லை. பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் கால் நடைகளும் ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்து கிடக்கிறது.

    இதன்மூலம் தொற்று நோய் பரவுவதை தடுக்க கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வெள்ள நிவாரணப் பணிகளில் அரசு அதிகாரிகளுடன் சமூக சேவகர்களும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்பு ஏற்படுத்திய சோகம் மறைவதற்குள் கேரளாவில் எலி காய்ச்சல் பரவி வருகிறது.

    கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, திருச்சூர், பாலக்காடு போன்ற மாவட்டங்களில் எலி காய்ச்சலின் பாதிப்பு அதிகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 பேர் எலி காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் 2 பேர் மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சமூக சேவகர்கள் ஆவர். அவர்களில் ஒருவர் பெயர் குமாரி (வயது 33). கொச்சி பெரும்பாவூர் ஐமுறி பகுதியை சேர்ந்த சமூக சேவகரான இவர் அந்த பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனையில் அவர் எலி காய்ச்சலுக்கு பலியானது தெரியவந்தது.

    இதேபோல சாலக்குடி பகுதியை சேர்ந்த சமூக சேவகர் சுரேஷ் (36) என்பவர் அந்த பகுதியில் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். சாலக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு எலி காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதேபோல நேற்று எலி காய்ச்சலுக்கு மலப்புரத்தில் 4 பேரும், காசர்கோட்டில் 2 பேரும், பாலக்காட்டில் 2 பேரும் இறந்து உள்ளனர். இதன் மூலம் இதுவரை எலி காய்ச்சலுக்கு கடந்த 3 நாட்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்து உள்ளது.

    காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஏராளமான பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது ரத்தம் பரிசோதனை செய்யப்பட்டு எலி காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக 68 பேர் பல்வேறு மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 33 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதனால் எலி காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜா கூறும்போது எலி காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெறும்படியும் கூறி உள்ளார்.  #KeralaFloods #KeralaRatFever





    Next Story
    ×