search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேரழிவில் மலரும் மனிதநேயம் - மசூதிக்கு சென்று நன்றி உரையாற்றிய பாதிரியார்
    X

    பேரழிவில் மலரும் மனிதநேயம் - மசூதிக்கு சென்று நன்றி உரையாற்றிய பாதிரியார்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தேவாலயத்தில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு உணவு வழங்கிய இஸ்லாமியர்களின் தன்னலமற்ற சேவைக்காக மசூதிக்கு சென்று நன்றி தெரிவித்த பாதிரியார்.
    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கின, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடரில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை சந்தித்த கேரள மாநிலம் தற்போது அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

    இதற்கிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கிறிஸ்துவ தேவாலயயம் ஒன்றில் தஞ்சம் அடைந்த மக்களுக்கு  தக்க நேரத்தில் உணவு வழங்கி உதவிய  இஸ்லாமியர்களின் சேவையை பாராட்டும் விதமாக பாதிரியார் ஒருவர் மசூதிக்கே சென்று நன்றி உரையாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

    கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் 580 பேர் தஞ்சம்  அடைந்திருந்தனர். பெரு வெள்ளம் காரணமாக அவர்கள் உண்ண உணவின்றி தவித்துள்ளனர். அச்சமயம் சனு புதுசேரி எனும் பாதிரியார் மத வேறுபாடுகளை கடந்து அருகில் இருந்த மசூதி ஒன்றின் மௌலவியிடம் உதவி கோரினார்.

    பாதிரியாரின் கோரிக்கையை ஏற்ற மௌலவி தேவாலயத்தில் இருந்த அனைவருக்கும் உடனடியாக உணவு ஏற்பாடு செய்து உதவினார். மேலும், உணவு மட்டுமின்றி மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருடகளையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இஸ்லாமியர்கள் கொடுத்து உதவினர்.

    இந்நிலையில், அவசரகாலத்தில் வேறுபாடுகளை மறந்து உதவிய இஸ்லாமிய சகோதர்களுக்கும் மசூதியின் மௌலவிக்கும் நன்றி செலுத்தும் விதமாக பாதிரியார் சனு புதுசேரி, வேச்சூரில் உள்ள மசூதிக்கு சென்றார். அங்கு தொழுகைக்காக கூடியிருந்த 250-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மத்தியில் நன்றி உரையாற்றினார்.

    மதவேறுபாடுகளை கடந்து கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மசூதிக்கு சென்று நன்றி தெரிவித்த சம்பவம் மனிதநேயத்திற்கான உதாரனமாக அப்பகுதி மக்களால்  பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×