search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், மோடியின் புகழ் பாடுகிறது பா.ஜ.க - சிவசேனா தாக்கு
    X

    நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், மோடியின் புகழ் பாடுகிறது பா.ஜ.க - சிவசேனா தாக்கு

    பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், பா.ஜ.க மோடியின் புகழ் பாடுவது, ரோம் நகர் எரியும் போது, நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல் இருப்பதாக சிவசேனா குறிப்பிட்டுள்ளது. #Demonetisation
    மும்பை:

    சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பு இழப்பு குறித்து தலையங்கத்தில் கடுமையாக மத்திய அரசை விமர்சித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
     
    'கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 2016, நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு இழப்பு  நடவடிக்கையைப் பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம், ஊழல் போன்றவை ஒழிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே அனைத்தும் நடந்துள்ளது.

    மக்களுக்கு வெறுப்பையும், மோசமான அறிவுரைகளையும் செலுத்தி செயல்படுத்தப்பட்ட இந்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையைத் தேசப்பற்றுடன் கொண்டுவரப்பட்டது என்று கூற முடியாது. நாட்டில் பொருளாதார சர்வாதிகாரத்தை இது ஏற்படுத்திவிட்டது.

    சமீபத்தில் வெளியான ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் பணமதிப்பு இழப்பின் போது புழக்கத்தில் இருந்த செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ரூ.1.47 லட்சம் கோடியில், 99.30 சதவீதம் வங்கிக்குத் திரும்பி வந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஏறக்குறைய ரூ.10 ஆயிரம் கோடி மட்டுமே வங்கிக்கு வரவில்லை.


    இதன்மூலம் மலையைத் தோண்டிப் பார்த்தும், ஒரு சுண்டெலிகூட வெளியேவரவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இந்தக் குறைவான தொகையை, பிடிப்பதற்காகத்தான் மத்திய அரசு பொருளாதாரத்தையே சிதைத்து இருக்கிறது.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவால், நாடு பொருளாதார குழப்பத்தைச் சந்தித்தது. சிறு, குறு தொழில்கள் அழிந்துபோகின. சேவைத்துறை மிகப்பெரிய சிக்கலில் சென்றது. கட்டுமானத்துறை ஆட்டம் கண்டன. சிறு, குறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் வங்கியின் வாசலிலும், ஏ.டி.எம் வரிசையிலும் நின்று மடிந்தனர்.

    அதுமட்டுமா, அதன்பின் நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் திடீரென சரிந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்தது.

    பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடியும், அதை நாடுமுழுவதும் பகிர்ந்து அளிக்க ரூ.2 ஆயிரம் கோடியும், ஏ.டி.எம் நெட்வொர்க்கை மேம்படுத்த ரூ.700 கோடியும் செலவு செய்துள்ளது.


    நாடு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை, இழப்பைச் சந்தித்தபோதிலும், மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசித்தான் வருகிறது. இந்த மனநிலையைப் பார்க்கும்போது, 'ரோம்நகரம் தீபற்றி எரியும்போது, நீரோ மன்னன் பிடில் வாசித்தது நினைவுக்கு வருகிறது'. பணமதிப்பு நீக்கம் என்பது கொடுமையான நடவடிக்கையாகும்.

    நாட்டின் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய நிலையில், அது கொள்ளையடிக்கப்பட்டபோது, அது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் ஒன்றும் செய்யாமல் இருந்துவிட்டார். அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்துக்கு இழுக்க வேண்டும்.

    பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது புரட்சிகரமான நடவடிக்கை. அதனால் கறுப்புப்பணம் ஒழிந்துவிடும் என்று நம்மிடம்  காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான கோடி கறுப்புப்பணம் அரசியல்வாதிகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது.

    குஜராத்தில் உள்ள இரு கூட்டுறவு வங்கிகளில் பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டன. பணமதிப்பு நீக்கம் குறித்து சில மாதங்களுக்கு முன்பே சில நாளேடுகள் இது குறித்து செய்தி வெளியிட்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை முட்டாள் என்று பட்டம் சூட்டியவர்களின் செயலின் உண்மை வெளிவந்துவிட்டது. பணமதிப்பு இழப்பு தோல்வி அடைந்த ஒன்று ரிசர்வ் வங்கி கூறிவிட்டது'. இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Demonetisation #BJP #ShivSena
    Next Story
    ×