search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா - என்னுடைய தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகிறது: எடியூரப்பா குற்றச்சாட்டு
    X

    சித்தராமையா - என்னுடைய தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகிறது: எடியூரப்பா குற்றச்சாட்டு

    சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்படுகிறது என்று கர்நாடக அரசு மீது எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். #yeddyurappa #Siddaramaiah
    பெங்களூரு :

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பாபுராவ் சின்சனசூர். இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக பணியாற்றினார். சுமார் 3 ஆண்டுகள் காலம் அவர் மந்திரியாக செயல்பட்டார். அதன் பிறகு மந்திரிசபை மாற்றத்தின்போது, அவரிடம் இருந்து மந்திரி பதவி பறிக்கப்பட்டது. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். தனது மந்திரி பதவி பறிபோக மல்லிகார்ஜுன கார்கே தான் காரணம் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டினார்.

    சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பாபுராவ் சின்சனசூர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில தலைவர் எடியூரப்பா முன்னிலையில் முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் பா.ஜனதாவில் சேர்ந்தார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

    சித்தராமையா மற்றும் என்னுடைய தொலைபேசிகளை கர்நாடக அரசு ஒட்டுகேட்கிறது. இது 100-க்கு 100 உண்மை. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இதற்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசியை ஒட்டுகேட்டதால் அப்போது இருந்த அரசுக்கு என்ன நடந்தது? என்பதை மாநில அரசு நினைவில்கொள்ள வேண்டும்.

    இந்த தொலைபேசி ஒட்டுகேட்பு பிரச்சினை குறித்து ஒரு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்து நாளையுடன் (அதாவது இன்று) 100 நாட்கள் ஆகிறது. மாநிலத்தில் அரசு உள்ளது என்ற மனநிலையே மக்களிடம் இல்லை.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரி பாபுராவ் சின்சனசூர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் மாநில தலைவர் எடியூரப்பா முன்னிலையில் கட்சியில் இணைந்தபோது எடுத்தபடம்

    ஒருபுறம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மற்றொருபுறம் மழை குறைவால் வறட்சி ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் துயரங்களை கேட்பவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. விதான சவுதாவுக்கு மந்திரிகள் யாரும் வருவது இல்லை. மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் முடங்கிவிட்டன. மாநிலத்தில் எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும்?. குடகு மாவட்டத்தில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து அவர்கள் தவிக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டங்களை சொல்லிமாளாது. இந்த கூட்டணி அரசு அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வதிலேயே காலத்தை கழிக்கிறது. பாபுராவ் சின்சனசூர் சேர்ந்துள்ளதால் பா.ஜனதாவுக்கு யானை பலம் வந்தது போல் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் கலபுரகியில் பலமான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

    பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு பாபுராவ் சின்சனசூர் பேசுகையில், “சட்டசபை தேர்தலில் என்னை காங்கிரசாரே தோற்கடித்துவிட்டனர். இதற்கு நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவேன். நான் 5 முறை எம்.எல்.ஏ.வாகவும், 2 தடவை மந்திரியாகவும் பணியாற்றியவன். நான் சார்ந்துள்ள கோளி சமூகத்தை மேம்படுத்த நான் அரும்பாடுபட்டேன். இதை சிலரால் சகித்துக்கொள்ள முடியாமல், தேர்தலில் என்னை சதி செய்து தோற்கடித்தனர்“ என்றார். #yeddyurappa #Siddaramaiah
    Next Story
    ×