search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி பொய் தகவல்களை கூறி தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார் - அருண் ஜெட்லி தாக்கு
    X

    ராகுல்காந்தி பொய் தகவல்களை கூறி தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார் - அருண் ஜெட்லி தாக்கு

    ரபேல் போர் விமான பேரத்தில், ராகுல் காந்தி பொய் தகவல்களை கூறி, தேச நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சாடினார். #ArunJaitley #RahulGandhi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரத்தில், ராகுல் காந்தி பொய் தகவல்களை கூறி, தேச நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சாடினார்.

    ரபேல் போர் விமான கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சினையை ராகுல்காந்தி எழுப்பினார்.

    இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் விதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி உள்ளார். அதில் ராகுல் காந்திக்கு அவர் 15 கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.

    36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு 2015-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15-ந் தேதி செய்தது. இது 2007-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக்கொண்ட பேரத்தை விட சிறந்த பேரம்தான் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.



    மேலும் அவர் எழுதி இருப்பதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தவறான பிரசாரம், இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் பொய்யான தகவல்களை பரப்புவதின் அடிப்படையில் தொடங்கியது. இது தேச நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

    ரபேல் போர் விமான சர்ச்சை, முழுக்க முழுக்க தவறான தகவல்கள் அடிப்படையிலானது.

    தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின்மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப்படுத்துகின்றனர்.

    ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ள ரகசியம் காக்க வேண்டும் என்ற விதிமுறை என்னை கட்டுப்படுத்துகிறது. நான் என்ன கேட்டாலும் அல்லது பதில் அளித்தாலும் அது அந்த வரம்புக்கு உட்பட்டது ஆகிறது.

    ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் கூறும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.520 கோடி என்றும் ரூ.540 கோடி என்றும் மாற்றி மாற்றிக் கூறினார். டெல்லியிலும், கர்நாடகத்திலும், ஏப்ரல், மே மாதம் பேசும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.700 கோடி என்று சொன்னார். ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது விலையை ரூ.520 கோடி என குறைத்தார்.

    பின்னர் ராய்ப்பூரில் பேசும்போது, ரூ.540 கோடி என்றார். ஐதராபாத்தில் கூறும்போதோ ரூ.526 கோடி என்ற புதிய விலையை கூறினார். உண்மை என்றால் ஒரே மாதிரிதான் இருக்கும். தவறு என்கிறபோதுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள், உண்மையுடன் எந்த ஒரு பரிச்சயமும் இல்லாமல் கூறப்படுகின்றனவா?

    ராகுல் காந்தியின் தவறான போக்கு, தேச நலன்களை பாதிக்கும் என்பதால்தான் நான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன். உடனடியாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.  #ArunJaitley #RahulGandhi #RafaleDeal

    Next Story
    ×