search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் தொடரும் மீட்பு பணிகள்
    X

    மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் தொடரும் மீட்பு பணிகள்

    மழை வெள்ளம்-நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. #Karnatakarains #Kodaguflood
    குடகு:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழை, நிலச்சரிவால் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். குடகு மாவட்டத்தில் உள்ள 51 நிவாரண முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்கியுள்ளனர். மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை மொத்தம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். மண்ணில் புதைந்த 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் சிலரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



    இதற்கிடையே, குடகு மாவட்டத்தில் மேலும் 10 பேர் மாயமாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்துக்கு முதல்-மந்திரி குமாரசாமி, மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் குடகில் தொடர்ந்து முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில், ஹெலி கேமராக்கள் மூலம் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். குடகில் மழை நின்றுள்ளதால், மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மறுசீரமைப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மடிகேரி டவுனில் உள்ள வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால், அங்குள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்த நிலையில் தற்போது மழை நின்றதால், வெள்ளம் வடிந்து வருகிறது. இதனால், நிவாரண முகாம் களில் இருந்த மக்கள், தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அரசு சார்பில் அறிவித்த ஒரு குடும்பத்துக்கு ரூ.3,800-ம், சமையல் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு அலுமினிய கொட்டகை அமைக்கும் பணியும் தீவிரமாக நடக்கிறது.

    மடிகேரி அருகே அட்டிஒலே பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்ட பிரான்சிஸ் என்பவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் நேற்று அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பிரான்சிசின் உடலை நேற்று அவருடைய உறவினர்கள் அடக்கம் செய்தனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பிரான்சிசின் குடும்பத்தினருக்கு ரூ.5.38 லட்சம் நிவாரண தொகைக் கான காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையை பா.ஜனதா எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன், அவருடைய குடும்பத்தினரிடம் வழங்கினார்.

    மேலும், கரடூர், ஆலேறி உள்ளிட்ட கிராமங்களில் கிராம பஞ்சாயத்து சார்பில் அரிசி, உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடகில் மழை நின்றாலும், ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் பரிதவித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாநிலம் முழுவதும் நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது. ஆனால், தங்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்றும், தங்களுக்கு உடனடியாக நிரந்தர வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மடிகேரி டவுன் சாமுண்டீஸ்வரி நகர் பகுதியில் சுமார் 200 வீடுகள் உள்ளன. அங்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். குடகில் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவால் அந்தப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில், தற்போது அந்தப்பகுதியில் நிலத்தில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக அங்கு வசித்து வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    மேலும், இந்த விரிசல், நிலச்சரிவுக்கான அறிகுறி என்றும் கருதப்படுகிறது. இதனால் அங்கும் நிலச்சரிவு ஏற்படும் என்று பீதியில் உள்ள மக்கள் வேறு பகுதிக்கு சென்று வருகிறார்கள்.  #Karnatakarains #Kodaguflood

    Next Story
    ×