search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு தத்தெடுப்பு மையங்களில் பசியால் வாடும் குழந்தைகள் - அதிர்ச்சி அறிக்கை வெளியீடு
    X

    அரசு தத்தெடுப்பு மையங்களில் பசியால் வாடும் குழந்தைகள் - அதிர்ச்சி அறிக்கை வெளியீடு

    பீகார் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு தத்தெடுப்பு மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் பல்வேறு மையங்களில் குழந்தைகள் பசியால் வாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
    பாட்னா:

    பீகாரில் பாதுகாப்பு இல்லங்களில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்பட்ட சம்பவங்கள் வெளியாகி நாட்டையே குலுக்கியது. இந்த நிலையில், பீகாரில் அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றி டாடா சமூக அறிவியல் அமைப்பு பட்டியலிட்டு உள்ளது.

    இதற்காக பீகாரின் 20 மாவட்டங்களில் உள்ள 21 அரசு நடத்தும் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் இந்த அமைப்பு ஆய்வு நடத்தியது. இந்த மையங்களில் அனாதைகள், வீட்டை விட்டு வெளியேறியோர், குடும்பத்தினரால் கைவிடப்பட்டோர் என 6 வயது வரையிலான குழந்தைகள் தங்கி உள்ளனர்.  இந்த மையங்களில் 70 சதவீதம் சிறுமிகள் உள்ளனர்.

    இதில் 3 வயது உடைய சில குழந்தைகள் பேசுவது இல்லை. ஏனெனில், இங்கு முறையான பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாததால், குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பும், அவர்களின் துளிர் பருவத்தில் தேவையானவற்றை கற்பிக்கவும் ஆட்கள் இல்லை என கூறப்படுகிறது.

    இங்குள்ள குழந்தைகள் சிறிய தவறு செய்தாலும், அவர்களை குளியல் அறையில் அடைத்து வைத்தல், தனிமையில் இருக்க வைத்தல், தகாத சொற்களால் திட்டுதல் என கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுபோன்ற தண்டனைகளால் குழந்தைகள் நீண்ட கால பாதிப்பிற்கு ஆளாகின்றனர் என அறிக்கை குழுவின் தலைவர் முகமது தாரீக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:

    'இவர்கள் மிக சிறியவர்கள். குளியல் அறையில் அடைத்து வைப்பது அவர்களை மனதளவில் கடுமையாக பாதிக்கும். எதற்காக தண்டனை வழங்குகிறார்கள் என்பது கூட அவர்களுக்கு புரியாது. இந்த குழந்தைகளுக்கு முறையான மருத்துவ வசதிகளும் இல்லை. இதனால் அவர்களின் வாழ்நாள் பற்றிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.

    இங்கு தத்தெடுக்க வரும் பெற்றோர் சிலரால், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர்.  அவர்களை திட்டுவது கூடாது.  அவர்கள் நலனில் அக்கறை காட்டுவதற்கு ஆள் இல்லாதது குழந்தைகளை வருத்தமடைய செய்கிறது.’

    என அவர் கூறியுள்ளார்.

    மேலும் இந்த அறிக்கையில் மிக முக்கியமாக, சில மையங்களில் குழந்தைகள் தங்குவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், இங்கு உள்ள குழந்தைகள் போதிய உணவு இன்றி பசியுடனே வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  #Bihar
    Next Story
    ×