search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை - தலைமைத் தேர்தல் ஆணையர்
    X

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை - தலைமைத் தேர்தல் ஆணையர்

    பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியமே இல்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். #ElectionCommissionofIndia
    மும்பை :

    உலகில் பல நாடுகளில் பாராளுமன்றம் மற்றும் மாகாண தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன.

    அதேபோல் இந்தியாவிலும் பாராளுமன்றத்துடன் சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

    விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதோடு சேர்த்து அனைத்து மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தலாமா? என்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக அனைத்து கட்சிகளும் பங்கேற்ற கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக கட்சிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தது.

    மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்பது திட்டம் கிடையாது அது ஒரு கொள்கை என்று குறிப்பிட்டு 8 பக்கங்கள் கொண்ட விரிவான கடித்தத்தை சட்ட ஆணையத்துக்கு இம்மாத தொடக்கத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா அனுப்பியிருந்தார்.

    இதனால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை சந்திக்க உள்ள மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் போன்ற மாநிலங்களுக்கு பாராளுமன்றத்துடன் தேர்தல் நடத்தப்படும் எனும் எதிர்ப்பார்ப்பு நிலவியது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது குறித்து நிருபர்கள் கேட்டனர்.

    நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்து ராவத் கூறியதாவது, ‘பொதுவாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு 14 மாதங்கள் முன்பாகவே தேர்தல் ஆணையம் அது தொடர்பான ஆயத்த பணிகளில் ஈடுபட தொடங்கிவிடும்.

    ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சட்ட ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைகள் நிறைவடைய ஓராண்டு காலம் ஆகும். எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலோடு அனைத்து மாநில சட்ட சபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமே இல்லை’ என அவர் தெரிவித்தார். #ElectionCommissionofIndia
    Next Story
    ×