search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள கனமழை - அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி, ஹோண்டா ரூ.3 கோடி, சாம்சங் ரூ 1.5 கோடி நிதியுதவி
    X

    கேரள கனமழை - அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி, ஹோண்டா ரூ.3 கோடி, சாம்சங் ரூ 1.5 கோடி நிதியுதவி

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு அதானி அறக்கட்டளை ரூ.50 கோடி, ஹோண்டா மோட்டார்ஸ் ரூ.3 கோடி, சாம்சங் இந்தியா ரூ 1.5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளன. #KeralaFlood
    புதுடெல்லி :

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு அதானி அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதி கணக்கில் இந்த தொகை செலுத்தப்பட்டுள்ளதாக அதானி அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    சாம்சங் இந்தியா நிறுவனத்தின் சார்பாக ரூ.1.5 கோடிக்கான காசோலையை அந்நிறுவனத்தின் பிரதிநிதி கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். மேலும், முகாம்களில் உள்ளவர்களுக்காக ஆயிரம் படுக்கைகள் மற்றும் போர்வைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.

    இதைத்தொடர்ந்து, ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவிற்கு நிதியுதவியாக ரூ.3 கோடிக்கான காசோலையை பிரதமர் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. #KeralaFlood
    Next Story
    ×