search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை திட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால் நோய்நொடி அற்ற தேசமாக இந்தியா இருந்திருக்கும் - மோடி
    X

    தூய்மை திட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டிருந்தால் நோய்நொடி அற்ற தேசமாக இந்தியா இருந்திருக்கும் - மோடி

    தூய்மை இந்தியா திட்டத்தை 70 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைபடுத்தியிருந்தால், இந்நேரம் நோய்நொடி அற்ற தேசமாக இந்தியா இருந்திருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #cleanindia #PMModi
    அகமதாபாத் :

    பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் சுற்றுபயணமாக நேற்று காலை குஜராத் வந்தடைந்தார்.  குஜராத் மாநிலம், வல்சாத் நகரில் உள்ள ஜுஜ்வா கிராமத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா  திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது  அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

    பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாவின் கீழ் உயர்ந்த தரத்துடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. யாரும் இதற்கு ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை.

    குஜராத் எனக்கு நிறைய அனுபவ பாடங்களை கற்று கொடுத்தது. இந்த பாடங்கள், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் எனது கனவுகளை எப்படி நிறைவேற்ற வேண்டும் என கற்றுக்கொடுத்து உள்ளது.

    என் கனவு என்னவென்றால் 75-ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டில் சொந்த வீடு இல்லாத குடும்பம் இருக்க கூடாது என்பதாகும். எனவே, 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தரப்படும்.

    உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், தூய்மை இந்தியா திட்டத்தினால் ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகளின் இறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்திற்கும் நமது ஆரோக்கியத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது.

    ஆரம்பத்தில் நான் தூய்மை இந்தியா திட்டத்தை பற்றி பேச தொடங்கிய போது அனைவரும் என்னை கிண்டல் செய்தனர். கழிவறைகளை கட்டுவதும் குப்பைகளை அப்புறப்படுத்துவதும் தான் ஒரு பிரதமரின் வேலையா ? என கேள்வி கேட்டனர். ஆனால், தூய்மை இந்தியா திட்டம் 70 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைபடுத்தியிருந்தால், இந்நேரம் நோய்நொடி அற்ற தேசமாக இந்தியா உருவெடுத்திருக்கும்.

    திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலையில்லாத நாடாக மாற்றுவது ஆரோக்கியத்தை நோக்கிய மிகப்பெரிய சேவையாக இருக்கும்.

    அடுத்ததாக, ஒவ்வொரு மூன்று பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உருவாக்கப்படும். பின்னர் அது இராண்டு பாராளுமன்ற தொகுதிகள், அதன் பின்னர் ஒரு பாராளுமன்ற தொகுதி என முன்னேறி இறுதியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #cleanindia #PMModi
    Next Story
    ×