search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளில் 2 அடிக்கு தேங்கிய சகதி - இயல்பு நிலைக்கு திரும்ப போராடும் கேரள மக்கள்
    X

    வீடுகளில் 2 அடிக்கு தேங்கிய சகதி - இயல்பு நிலைக்கு திரும்ப போராடும் கேரள மக்கள்

    கேரளாவில் அணை கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் வடிந்த நிலையில் சுமார் 2 அடி உயரத்திற்கு சேறும், சகதியும் சேர்ந்திருந்தன. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மழை வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்கள் திறக்கப்பட்டன. இதில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியிருந்தனர். சுமார் 1 வாரம் முகாம்களில் அடைந்து கிடந்த மக்கள் இப்போது மழை விட்டதால் முகாம்களை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர்.

    எர்ணாகுளம், ஆலுவா, இடுக்கி, செறுதோணி, பத்தனம் திட்டா பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளுக்கு சென்றனர்.

    இடுக்கி அணை கரையோரங்களில் உள்ள வீடுகளில் நேற்றுதான் வெள்ளம் வடிந்தது. இங்குள்ள வீடுகளில் சுமார் 2 அடி உயரத்திற்கு சேறும், சகதியும் சேர்ந்திருந்தன. இவற்றை அகற்றுவது பெரும்பாடாக இருந்தது. பெண்கள் மண்வெட்டி மூலம் சேற்றை வெட்டி அகற்ற போராடினர்.


    பல வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமாகி விட்டது. குறிப்பாக பொதுமக்களின் முக்கிய ஆவணங்கள், நிலப்பத்திரங்கள், ரேசன் கார்டுகள், ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து நாசமாகிவிட்டது.

    குழந்தைகள், மாணவர்களின் பள்ளி புத்தகங்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. எஞ்சிய பொருட்களை மக்கள் வீடுகள் முன்பு பரப்பி காய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சேர்த்து வைத்த பொருட்கள் வெள்ளத்தில் நாசமானதை கண்டு அவர்கள் கண்ணீர்விட்டனர்.

    விவசாயிகளின் நிலைமை இதை விட பரிதாபமாக இருக்கிறது. நிலச்சரிவு காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் நிலங்கள் மண் மூடி கிடக்கிறது. அவர்களின் உழைப்பும் வீணாகி போனது.

    தென்னை, வாழை, ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் நிலச்சரிவில் நாசமாகி விட்டது. மலை தோட்டங்களும் பெருவெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது. இந்த பாதிப்புகளில் இருந்து மீள்வதற்கு கேரளம் போராடி வருகிறது. #KeralaFloods
    Next Story
    ×