search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
    X

    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. #FireCracker #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி, தசரா பண்டிகை காலத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பல்வேறு இந்து அமைப்புகள் என சுமார் 100 பேர் எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுடன் தீபாவளி சமயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கலந்தாலோசித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தீபாவளியின்போது பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மீது பரிசோதனை நடத்தப்படும். குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகள் தயாரிக்க வலியுறுத்தப்படும்.

    * சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க அறிவுறுத்தப்படும்.

    * பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு தடை செய்யப்படும். பட்டாசுகளில் அலுமினியம் தாது கலப்பதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மறு ஆய்வு செய்யும்.

    * தீபாவளிக்கு 14 நாட்களுக்கு முன்பும் தீபாவளி முடிந்து 7 நாட்களுக்குப் பிறகும் அலுமினியம், பேரியம், இரும்புத்தாதுப் பொடி ஆகியவை பட்டாசுகளில் பயன்படுத்துவது குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

    * சரவெடிகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைவதால் அவற்றின் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம்.

    * வெளிநாடுகளைப் போல இந்தியாவின் பெரிய நகரங்களில் குடியிருப்போர் சங்கங்கள் வழியாக குடும்பங்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான இடம், மைதானத்தை மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானித்து அறிவிக்கலாம்.

    * மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    மேலே கூறப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் 2 வாரங்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே கோர்ட்டு 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், வரும் தீபாவளியில் அமல்படுத்தலாம்.

    இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு இடையே தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பா.வினோத் கன்னா ஆகியோர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

    இத்தனை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு, சிவகாசியில் அனைத்து ஆய்வு வசதிகளும் கொண்ட மத்திய அரசு நிறுவனமான பட்டாசு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஏன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இது குறித்து உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவின் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில் குறிப்பாக சிவகாசியில் நடைபெறுகிறது. அதில் 40 சதவீதம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. டெல்லி, பட்டாசுக்கான வர்த்தக மையமாக செயல்படுகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது.

    எனவே, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். சிவகாசியின் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவர்கள் ஆவார்கள். 1,070 பட்டாசு தொழிற்சாலைகளால் 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைகின்றன. பட்டாசுகள் பிரச்சினை என்று கருதி, தீர்வாக பட்டாசுக்கு தடை விதிப்பது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பட்டாசு மீதான தடை என்பது கண்டிப்பாக ஒரு தீர்வாக இருக்காது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்னும் தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் வக்கீல் ஜே.சாயி தீபக் வாதிட்டபோது, “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இது கொண்டாட்டம் சார்ந்த மத ரீதியான நடவடிக்கை. இந்துக்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதில்லை. சீக்கியர்களும் சமணர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் பண்டிகைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு எதிரான முறையான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. இங்கு தீபாவளி என்பது பிரச்சினை அல்ல. சுற்றுச்சூழல் மாசுபடுவதே பிரச்சினை. எனவே மத்திய அரசு பரிந்துரைத்தபடி சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு தயாரிப்புக்கும் விற்பனை, உபயோகம் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #FireCracker #SupremeCourt #Tamilnews
    Next Story
    ×