search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் இடிந்தன
    X

    கேரளாவில் மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் இடிந்தன

    கேரளாவில் நிவாரண முகாம்களில் தங்கி இருந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக இடிந்து நாசமாகிவிட்டது. #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் 100 ஆண்டுகளில் சந்திக்காத பெருவெள்ளத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் பேரிடர் ஏற்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 10 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். தற்போது கடந்த 2 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக இடிந்து நாசமாகிவிட்டது.

    இதனால் பலர் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த இழப்பில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் அவர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஏராளமான வீடுகள் பெரும் சேதத்துடன் காணப்படுகிறது. வீடு முழுவதும் சேறும், சகதியுமாக மாறிவிட்டது. பாம்பு உள்பட வி‌ஷ ஜந்துகளும் குடியேறி இருந்தன.



    கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர் போன்ற இடங்களில் அதிகளவிலான வீடுகள் இடிந்துள்ளன. கண்ணூர் அருகே குட்டநாடு பகுதியில் ஒரு கிராமமே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இங்கும் வீடுகள் இருந்த இடமே தெரியாதபடி உள்ளது.

    26 லட்சம் வீடுகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ரூ.1,100 கோடி வரை விவசாயம் மற்றும் வீடுகள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 6 நாட்களில் மட்டும் 251 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெள்ளக்காடாக மாறிய கேரளாவில் ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளன. தற்போது வெள்ளம் வடிந்துவரும் நிலையில் ஆங்காங்கே கால்நடைகள் செத்து மிதக்கின்றன. ஏராளமான மாடுகள், ஆடுகள் அழுகிய நிலையில் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகாதார பணிகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    மழை வெள்ளம் புகுந்ததால் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க முடியாத நிலை உருவானது. இதனால் அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் திறந்து விமான சேவையை தொடங்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.

    தற்போதையை நிலவரப்படி கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.  #KeralaRain #KeralaFloods
    Next Story
    ×