search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் 20 நாளில் 771 மி.மீட்டர் மழை
    X

    கேரளாவில் 20 நாளில் 771 மி.மீட்டர் மழை

    கேரளாவில் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 20 நாளில் 771 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இது 87 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு பெய்த அதிகபட்ச மழை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் இருந்து வழக்கத்தை விட கூடுதலாக மழை பெய்தது. கடந்த 8-ந்தேதி முதல் பேய் மழை பெய்ய தொடங்கியது.

    இதனால் கேரளாவில் உள்ள அணைகள் முழுவதும் நிரம்பி வழிந்தது. எனவே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள 80 அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைதொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளத்தால் ஒட்டுமொத்த கேரளாவும் வெள்ளத்தில் மூழ்கியது.

    கேரளாவில் உள்ள 16 மாவட்டங்களில் திருவனந்தபுரம், காசர்கோடு தவிர 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகள் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 100 ஆண்டுகளில் இல்லாத பேரழிவில் சிக்கிய மக்கள் வீடு மற்றும் உடைமைகளை விட்டு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். 5,645 முகாம்களில் 7 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் தங்கியுள்ளனர்.

    இந்தநிலையில் கேரளாவில் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை அதாவது 20 நாளில் 771 மி.மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இது 1931-ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 87 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு பெய்த அதிகபட்ச மழை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழை அளவை விட இது 2.5 மடங்கு அதிகமாகும்.

    அதேநேரத்தில் இடுக்கி மாவட்டத்தில் மட்டும் விடாது தொடர்ந்து பேய் மழை பெய்து சாதனை படைத்துள்ளது. அங்கு கடந்த 20 நாளில் மட்டும் 1,419 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.

    இதற்கு முன்பு 1907-ம் ஆண்டில் பெய்த 1,387 மி.மீட்டர் மழைதான் மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனையை 111 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பெய்துள்ள மழை முறியடித்துள்ளது.



    கேரளாவில் கடந்த 1875-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை தென்மேற்கு பருவமழையின் அளவு குறைந்து கொண்டே வந்தது. அதேநேரத்தில் 2013, 2014 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் மட்டும் பருவமழை வெளுத்து வாங்கியது.

    பருவமழை தொடர்ந்து குறைவாக பெய்ததால் வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கையை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தான் பெரும் சேதத்தையும், இன்னல்களையும் சந்திக்க நேர்ந்தது என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பருவமழை தீவிரம் அடைந்த நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. அதனால் வீசிய பலத்த காற்றினால் கேரளாவில் மழை கொட்டித்தீர்த்தது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 4 நாட்கள் விடாது தொடர்ந்து அடைமழை பெய்தது. ஒருநாள் மட்டும் 25.4 மி.மீட்டர் மழை பெய்தது. அதன்பின்னர் 6 நாட்கள் யாரும் எதிர்பாராத அளவு மழை பெய்து கொண்டே இருந்தது.

    இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 5 நாட்களில் 70 மி.மீட்டர் முதல் 110 மி.மீட்டர் வரை மழை கொட்டியது. 3 நாட்களில் 120 மி.மீட்டர் முதல் 200 மி.மீட்டர் அளவு மழை பெய்தது. பீர்மேடு வானிலை ஆய்வு மைய பகுதியில் மட்டும் 24 மணி நேரம் பெய்த மழை அளவு 100 வருட பழைய சாதனையை முறியடித்தது.

    இதற்கு முன்பு இங்கு ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்சமாக 100 மி.மீட்டர் அளவே மழை பெய்துள்ளது. #KeralaRain #KeralaFloods

    Next Story
    ×