search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
    X

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் செல்கிறது. #KabiniDam #KRSDam
    மைசூரு:

    கர்நாடகத்தில் கடந்த மே மாதம் இறுதியில் இருந்து தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கர்நாடக கடலோர மாவட்டங்களாக தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார் மற்றும் மலைநாடு என அழைக்கப்படும் சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இதன்காரணமாக கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகள் நிரம்பின.

    முக்கியமாக குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணையும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் உள்ள கபினி அணையும் கடந்த 2 மாதங்களில் 2 முறை முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக திறக்கப்பட்டது. இதன்காரணமாக, காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    நேற்று காலை நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் 121.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 94,382 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 84,060 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,280.13 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 47,529 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 46,667 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.



    இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    இரு அணைகளில் இருந்தும் நேற்று முன்தினம் வினாடிக்கு 1.62 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1.30 லட்சம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டாலும், காவிரி மற்றும் கபிலா ஆறுகளில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.

    இதனால், கரையோரத்தில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளம் குறைந்த பின்னர் தான், அவர்கள் கரையோர பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  #KabiniDam #KRSDam
     
    Next Story
    ×