search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் தவறான  தகவல்களால் காங்கிரஸ் தவறாக வழி நடத்தப்படுகிறது - ராகுலுக்கு அனில் அம்பானி கடிதம்
    X

    ரபேல் விவகாரத்தில் தவறான தகவல்களால் காங்கிரஸ் தவறாக வழி நடத்தப்படுகிறது - ராகுலுக்கு அனில் அம்பானி கடிதம்

    ரபேல் போர் விமான முறைகேடு ஊழல் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதற்கு மறுப்பு தெரிவித்து ராகுல் காந்திக்கு அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார். #RafaleDeal #AnilAmbani #RahulGandhi
    மும்பை:

    இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு இந்த விமானங்கள் வாங்கப்படுகின்றன.

    ரபேல் விமானங்களை வாங்க காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தை பாரதிய ஜனதா ஆட்சியில் ஏற்படுத்தினார்கள். அதில் அதிக தொகை கொடுத்து விமானத்தை வாங்க ஒப்பந்தம் செய்திருப்பதாகவும், இதில் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி இருக்கிறது.

    ரபேல் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்யும் பிரான்ஸ் நிறுவனமான டஸ்சால்ட் நிறுவனத்துடன் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து கூட்டாக பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    எனவே, அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சாதகமாக மத்திய அரசு ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி அமைத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.



    இந்நிலையில், தன் மீதான ராகுல் கந்தியின் குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து தொழிலதிபர் அனில் அம்பானி அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-

    ராகுல் காந்தி, என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருப்பது வருத்தம் அளிக்கிறது.  ரபேல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அடிப்படை ஆதாரம் அற்றதாகும்.

    தீங்கு இழைக்கும் நோக்கத்தில் கார்பரேட் நிறுவன போட்டியாளர்கள் சிலர் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு, தவறான தகவல்களை அளித்து, தவறாக இயக்கி, தவறான பாதையில் அழைத்து செல்கிறார்கள். ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், இந்திய பாதுகாப்புத்துறைக்கும் இடையே ரபேல் விமான தயாரிப்பு தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் ஏற்படுத்தப்படவில்லை.

    ரபேல் விமானத்தில் இருக்கும் ஒரே ஒரு பாகம் கூட டஸ்சால்ட் - ரிலையன்ஸ் கூட்டு தயாரிப்பு கிடையாது. ஒப்பந்தத்தில் உள்ள 36 ரபேல் போர் விமானங்களின் 100 சதவிகத பாகங்கள் அனைத்தும் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    எனவே, ரபேல் விமான ஊழல் தொடர்பாக தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்புவதை காங்கிரஸ் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அனில் அம்பானி தெரிவித்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நேரத்தில் பாரதிய ஜனதா அரசு மீது ரபேல் விமான ஊழல் விவகாரத்தை பெரிய அளவில் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. #RafaleDeal #AnilAmbani #RahulGandhi
    Next Story
    ×