search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்
    X

    சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்

    ஆண்கள் மட்டுமே சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்ற பாரம்பரிய வழக்கத்தை உடைத்த வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு, புதிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். #AtalBihariVajpayee #Vajpayee #RIPVajpayee

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகன் நமிதா கவுல் பட்டாச்சார்யா தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தார்.

    வாஜ்பாய் திருமணம் ஆகாதவர். எனவே, நமிதா கவுலை வளர்ப்பு மகளாக எடுத்து வளர்த்து வந்தார்.

    பொதுவாக இந்துக்களின் மரபுப்படி பெற்றோரின் சிதைக்கு மகன் தீ மூட்ட வேண்டும். அப்படிஇல்லாத பட்சத்தில் நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் மகன் உறவு கொண்ட ஒரு ஆண் தீ மூட்ட வேண்டும்.பெண்கள் தீ மூட்டுவதற்கு அனுமதிப்பது இல்லை.

    வாஜ்பாய் குடும்பத்திலும் இதே நடைமுறைதான் இருந்து வந்தது. இறந்தவருடைய மகன் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு அப்பால் இருந்து வர முடியாத நிலை இருந்தாலும், ஆண் வாரிசு இல்லை என்றாலும் உறவினரில் ஒரு ஆண்தான் தீ மூட்ட வேண்டும் என்று விதிகளை வகுத்துள்ளனர்.

    ஆனால், வாஜ்பாய் சிதைக்கு அவரது வளர்ப்பு மகள் நமிதா கவுல் தீ மூட்டினார். இது, பாரம்பரிய பழக்கத்தை மீறும் செயல் என சர்ச்சை எழுந்துள்ளது.

    ஆனாலும், நமிதா கவுல் செய்தது சரியானது என்று பல பெண்கள் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

    டெல்லியை சேர்ந்த பேராசிரியை கியா சவுத்ரி கூறும்போது, பெண்களை சுடுகாட்டுக்கு செல்ல அனுமதி மறுப்பது, இறுதிச்சடங்கு செய்ய அனுமதிக்காதது போன்ற பழக்கங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது.

    எங்கள் வீட்டில் ஆண் வாரிசு இல்லை. எனது தாயார் இறந்த போது நான் தான் தீ மூட்டினேன். அடுத்து எனது தந்தைக்கும் நான் அதை செய்வேன்.

    நான் அவர்களுக்கு ஒரே மகள். என்னை அவர்கள் ஒரு ஆண் மகன் போலவே வளர்த்தார்கள். ஆண் மகன் போன்ற கடமையை நான் செய்கிறேன் என்று கூறினார்.

    மகள்களையும் இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே சமூக அமைப்புகளை சேர்ந்த பெண்கள் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பெண்கள் பிரசாரமும் செய்து வருகிறார்கள்.

    கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்டத்தில் முன்னாள் ராணுவ அதிகாரி மதுநாயர் சில ஆண்டுகளுக்கு முன்பு மரணம் அடைந்தார்.

    அப்போது மதுநாயரின் விருப்பப்படி அவரது மகள்கள் தான் சிதைக்கு தீ மூட்டினர். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. மகள்கள் தீ மூட்டினால் இறந்தவர் மோட்சத்துக்கு செல்ல முடியாது என்று அவர்கள் வாதிட்டார்கள்.

    மராட்டிய மாநிலம் குபாரி என்ற இடத்தில் இறந்தவர் ஒருவருக்கு அவரது மகள்கள் தீ மூட்ட முயற்சித்தனர். அப்போது உறவினர்கள் அவர்களை தள்ளி விட்டு விட்டு உறவினரில் ஒரு ஆண் சிதைக்கு தீ மூட்டினார்.

    இது சம்பந்தமாக அந்த பெண்கள் கூறும்போது, வாஜ்பாய் உடலுக்கு அவரது வளர்ப்பு மகள் தீ மூட்டியதை நாங்கள் பார்த்தோம். இது, பெண்களுக்கு கிடைத்த உரிமையாக கருதுகிறோம் என்று கூறினார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் இறந்த ஒருவருக்கு அவரது மகள் தீ வைத்ததற்காக கிராம பஞ்சாயத்தார் அந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தனர். அவர்களுக்கு யாரும் உணவு மற்றும் எந்த பொருளும் வழங்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

    மராட்டிய பாரதிய ஜனதா தலைவர கோபிநாத் முண்டே 2014-ல் மரணம் அடைந்தார். அப்போது கூட அவரது மகள் பங்கஜ் முண்டேதான் சிதைக்கு தீ மூட்டியது குறிப்பிடத்தக்கது.

    அதே போல் வாஜ்பாய் உடலுக்கு நமிதா கவுல் தீ மூட்டி பெண்களுக்கும் உரிமை உள்ளது என்பதை நிலைநாட்டி உள்ளார்.

    இதற்கிடையே வாஜ்பாய் அஸ்தியை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இது சம்பந்தமாக வாஜ்பாய் குடும்ப பூசாரிகளுக்குள் பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது.

    வாஜ்பாயின் பூர்வீக ஊர் பதேஸ்வர் ஆகும். ஆனால், வாஜ்பாய் குடும்பத்தினர் நீண்ட காலமாக குவாலியரில் வசித்து வந்தனர். அங்கு தான் வாஜ்பாய் பிறந்தார்.

    இப்போது பதேஸ்வர் மற்றும் குவாலியரில் இருந்து 3 பூசாரிகள் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நான்தான் வாஜ்பாய் அஸ்திக்கு சடங்கு செய்யும் அதிகாரம் கொண்டவன் என்று வாதிட்டு வருகிறார்கள்.

    இது சம்பந்தமாக கங்கா சபா என்ற அமைப்பு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

    Next Story
    ×