search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாஜ்பாய் ஒரு கலா  ரசிகர்
    X

    வாஜ்பாய் ஒரு கலா  ரசிகர்

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிறந்த கவிஞர். கலகலப்பான நபர். மிகப்பெரும் கலா ரசிகர். பழைய படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார். #AtalBihariVajpayee
    பொதுவாக அரசியலில் இருப்பவர்கள், பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் எப்போதும் ஒரு இறுக்கமான மனதுடனேயே காட்சி அளிப்பார்கள்.

    அவர்கள் மற்ற வி‌ஷயங்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், வாஜ்பாய் அப்படிப்பட்டவர் அல்ல. சிறந்த கவிஞர். கலகலப்பான நபர். மிகப்பெரும் கலா ரசிகர். அதுவும் சினிமா என்றால் அவருக்கு உயிர்.

    இதுபற்றி அவரது நெருங்கிய உறவினரான மாலா திவாரி சொல்வதை கேளுங்கள்...

    நான் வாஜ்பாயின் மூத்த சகோதரர் சதாபிகாரி வாஜ்பாயின் மகள். நாங்கள் ஆரம்பத்தில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசித்து வந்தோம்.

    அப்போது நாங்கள் அடிக்கடி சினிமா பார்ப்போம். சித்தப்பா வாஜ்பாய்க்கும் சினிமா பார்ப்பதில் அலாதி பிரியம். எங்களுடன் அமர்ந்து அவரும் சினிமா பார்ப்பார்.

    நான் 1955-ல் பிறந்தேன். எனக்கு வேறு பெயர் சூட்டப்பட்டு இருந்தது. நான் பிறந்து ஒரு வருடம் கழித்து வைஜெயந்திமாலா நடித்த ‘நகின்’ என்ற படம் வெளியானது.

    நான் குழந்தையாக இருந்த போது, அடிக்கடி அழுவேனாம். ஆனால், நகின் படத்தின் பாடலை ஒலிபரப்பினால் உடனே அழுகையை நிறுத்தி விடுவேனாம்.

    இதனால் சித்தப்பா வாஜ்பாய் எனக்கு அந்த படத்தின் கதாநாயகியான வைஜெயந்திமாலா பெயரை சுருக்கி மாலா என்று பெயர் வைத்து விட்டார். அந்த பெயர்தான் இப்போது நீடித்து விட்டது.

    வாஜ்பாய் பழைய படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார். அதிலும் நகின், ரசியாசுல்தான் போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும்.



    1999-ல் அமீர்கான் நடித்து வெளிவந்த ‘சர்பரோஸ்’ படத்தையும் மிகவும் விரும்பி பார்த்தார். அந்த படத்தை பார்த்து விட்டு என்னிடம் போனில் பேசி நீயும் அந்த படத்தை பார். நன்றாக இருக்கிறது என்று கூறினார்.

    நான் திருமணம் முடிந்து டெல்லியில் இருந்த போது, வாஜ்பாய், அத்வானி, அவருடைய மனைவி மற்றும் எனது கணவர் ஆகியோர் ஒன்றாக சென்றும் படம் பார்த்து இருக்கிறோம்.

    குவாலியரில் தயாரிக்கும் லட்டு என்றால் வாஜ்பாய்க்கு மிகவும் பிடிக்கும். எனவே, குவாலியரில் இருந்து எங்களது குடும்பத்தினர் யார் வந்தாலும் அவருக்காக லட்டு தயாரித்து கொண்டு வருவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #AtalBihariVajpayee
    Next Story
    ×