search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 72 ஆனது
    X

    கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை - பலி எண்ணிக்கை 72 ஆனது

    கேரள மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக இடைவிடாமல் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளா இதுவரை கண்டிராத வகையில் மிக கனத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.கடந்த 2 வாரங்களாக இந்த மழை இடைவிடாமல் பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பிவிட்டன.

    இதனால் அங்குள்ள 33 அணைகள் திறக்கப்பட்டு உள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழை காரணமாக ஆறுகளில் பெருக்கெடுத்துள்ள வெள்ளம் போன்ற காரணங்களால் கேரளாவில் உள்ள அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை கேரளாவில் மிதமிஞ்சிய மழை பெய்யும் என்றும் நாளை (17-ந் தேதி) காலை 8.30 மணி முதல் 19-ந் தேதி காலை 8.30 மணி வரை பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்று  வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.

    இந்த மழை காரணமாக  கடந்த 15 நாட்களில் மட்டும் 72 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 29 பேர் இறந்துவிட்டனர். இதில் மலப்புரம் மாவட்டத்தில் வீடு இடிந்ததில் 8 பேர் பலியான சோகமும் நடந்துள்ளது.   பத்தனம்திட்டா, கண்ணூர், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மிக அதிகமாக காணப்படுகிறது. மலம்புழா அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பல பாலங்களை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது.


    ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளின் மாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் கைவசம் இருந்த உணவு, குடிநீர் காலியாகி விட்டதால் அவர்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தங்களை மீட்கும்படி பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வெள்ள கட்டுப்பாட்டு அறைகளுக்கு சென்ற வண்ணம் உள்ளது. இதைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணிகள்  தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. படகுகளில் சென்று அவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். நெய்யாற்றின்கரை  பகுதியிலும் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களிடம் இருந்து உதவி கேட்டு வந்த தகவலின் பேரில் அவர்களையும் மீட்பு படையினர் மீட்டனர். அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் முகாம்களில் தஞ்சம் அடையும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஏராளமான மக்கள் மீட்க முடியாதபடி அதிக வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனமழை நீடிப்பதால் இதில் பெரும் சிரமம் நிலவி வருகிறது.

    சபரிமலை அய்யப்பன் கோவில் செல்லும் வழியில் உள்ள பம்பை ஆற்றிலும் தொடர்ந்து வெள்ளம் அபாய அளவை தாண்டியே செல்கிறது. மேலும் ஆரன்முளா, ராணி போன்ற சுற்று பகுதியும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் செல்ல முடியாத  நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.  

    கேரளாவில் பள்ளிகளுக்கு வருகிற 31-ந் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மழை பாதிப்பு காரணமாக காலாண்டு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுஉள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தை  மழை வெள்ளம் சூழ்ந்ததால்  இங்கு விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கொச்சி விமான நிலையம் வருகிற 18-ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மட்டும் விமான போக்குவரத்து  நடந்து வருகிறது. இதன் காரணமாக விமான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

    கேரளாவில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகளை ஏற்கனவே மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய குழுவும் வெள்ள பாதிப்பை பார்வையிட்டு உள்ளது. முதல் கட்டமாக கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.100 கோடி நிதி உதவியையும் மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகளை கேட்டறிந்தார். கேரளாவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும்  மத்திய அரசு செய்யும் என்று அவர் தெரிவித்தார். #KeralaFloods
    Next Story
    ×