search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ககன்யான் விண்வெளி திட்டத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்
    X

    ககன்யான் விண்வெளி திட்டத்தின் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

    சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்ட ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #CharimanSivan
    புதுடெல்லி:

    சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி வெளியிட்ட ‘ககன்யான்’ விண்வெளி திட்டத்துக்கான 70 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். #ISRO #CharimanSivan

    விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ‘ககன்யான்’ என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என டெல்லியில் நேற்று நடந்த சுதந்திர தினவிழாவில் பேசும்போது, பிரதமர் மோடி கூறினார்.

    இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) தலைவர் சிவன், செய்தியாளர்களிடம் விளக்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாட்டுக்கு பிரதமர் வழங்கிய மிகச்சிறந்த பரிசுதான், ‘ககன்யான்’ திட்டம் ஆகும். இந்த திட்டம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாகவும் அமையும்.

    தேசிய திட்டமான இந்த ககன்யான் திட்டத்தில் பல்வேறு அமைப்புகள், அகாடமிக்கள் மற்றும் தொழில்துறையினர் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர். இதன் மூலம் இந்தியா வளர்ந்த நாடுகளின் பட்டியலில் இணைவதுடன், தேசத்தின் பெருமையும் உயரும்.

    இது ஒரு பெரிய அறிவிப்பு ஆகும். 2022-ம் ஆண்டுக்குள் இந்த சாதனையை எட்டிப்பிடிப்பது இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சவால்தான். ஆனாலும் அதை நாங்கள் செய்து முடிப்போம். ஏனெனில் இந்த திட்டத்தின் 60 முதல் 70 சதவீத பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டன.

    அதன்படி வீரர்கள் இருக்கும் பகுதி, வீரர்கள் தப்புவதற்கான வழிமுறைகள், சுற்றுச்சூழல் கட்டுப்பாடு, உயிர்காக்கும் கருவிகள் மற்றும் விண்வெளி உடைகள் போன்ற தொழில்நுட்ப பணிகள் அனைத்தையும் ஏற்கனவே நாங்கள் தயாரித்து விட்டோம். அத்துடன் இந்த திட்டத்துக்கு பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டையும் நாங்கள் வடிவமைத்து உள்ளோம்.

    இதற்கான கட்டுப்பாட்டு மையம், ஏவுதளம் மாற்றி அமைப்பு, கருவிகள் இணைப்பு போன்ற சில கட்டமைப்பு பணிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. இவையும் கடினமான பணி அல்ல.

    இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், 2 ஆளில்லா விண்கலங்களை இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தி சோதனை மேற்கொள்வோம்.

    இவ்வாறு சிவன் கூறினார்.  #ISRO #CharimanSivan #Tamilnews 
    Next Story
    ×