search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மிக மோசமான நிலையில் கேரளா - வெள்ளம், நிலச்சரிவால் போக்குவரத்து முடக்கம்
    X

    மிக மோசமான நிலையில் கேரளா - வெள்ளம், நிலச்சரிவால் போக்குவரத்து முடக்கம்

    கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதன் காரணமாக மாநிலத்தின் பல இடங்கள் நிர்மூலமாகிப் போயுள்ளது. #KeralaRains #KeralaFlood
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. 

    எனவே 33 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இன்று காலை வரையில் 24 மணி நேரத்தில் 38.11 மி.மீ. மழை பெய்து இருக்கிறது. மாநிலத்தின் 14 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

    அங்கு அடுத்த 24 மணி நேரத்தில் கனமழையும், மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 12 மாவட்டங்களுக்கு கடும் அபாய எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. 



    தொடர் மழை மற்றும் அணைகளிலிருது வெளியாகும் தண்ணீர் காரணமாக கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

    இன்று வெள்ளம், நிலச்சரிவு போன்ற மழை தொடர்பான விபத்து சம்பவங்களில் 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்தது. இடுக்கி, முல்லைப்பெரியாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொச்சி சர்வதேச விமான நிலையத்தை சூழ்ந்துள்ளது. 

    ஓடுபாதை மற்றும் சுற்றுவட்டார இடங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளதால் விமான நிலையம் 18–ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக மாநிலத்தில் வெள்ள நிலவரம் மிகவும் மோசமாகியுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு கூடுதல் உதவிகளை செய்யும்படி கேரள அரசு கோரிக்கையை விடுத்து வருகிறது. கேரளாவில் மீட்புப் பணிக்காக மத்திய அரசு கூடுதலாக ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், படகுகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, பினராய் விஜயன் கோரிக்கையை விடுத்துள்ளார். 



    இதற்கிடையே பினராய் விஜயனிடம் பேசிய பிரதமர் மோடி, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் குறித்து அம்மாநில முதல்வரிடம் கேட்டறிந்தேன், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்று கூறியுள்ளார். 

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரளாவிற்கு 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவை அனுப்பியுள்ளது. கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

    ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் கேரளாவில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு புனேவில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஒவ்வொரு பிரிவிலும் 45 வீரர்கள் இருப்பார்கள். ஏற்கனவே இடுக்கி, எர்ணாகுளம், பாலகாடு, ஆழபுலா, கோழிக்கோடு, வயநாடு, திரிச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 பிரிவுகள் நிலை நிறுத்தப்பட்டு, மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 
    Next Story
    ×