search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 18ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடல்
    X

    பெரியார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 18ம் தேதி வரை கொச்சி விமான நிலையம் மூடல்

    பெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் தொடர் மழையால் விமான நிலையத்திற்குள் தண்ணீர் தேங்கியதால் கொச்சி விமான நிலையம் 18-ம் தேதி வரை மூடப்பட்டது. #PeriyarRiverFlood
    கொச்சி:

    கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. அணைகள் திறப்பால் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து மேலும் வெள்ளக்காடாக பல்வேறு இடங்கள் காணப்படுகிறது. இடுக்கி, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு, பாலக்காடு ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. முப்படைகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், பாலக்காடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடலோர மாவட்டமான கொச்சியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பெரியார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் புகுந்துள்ளது. தற்போது இடைவிடாமல் மழை பெய்து வருவதால் மழை நீரும் தேங்கி கடல் போல் தேங்கியுள்ளது.

    விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது. வரும் சனிக்கிழமை (18-ம் தேதி) பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRains #KochiAirport #PeriyarRiverFlood
    Next Story
    ×