search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்றும் பலத்த மழை - கேரளாவில் தீவுகளாக மாறிய வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்கள்
    X

    இன்றும் பலத்த மழை - கேரளாவில் தீவுகளாக மாறிய வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்கள்

    கேரளாவில் இன்றும் பலத்த மழை பெய்ய தொடங்கியதால் தொடர்ந்து வயநாடு கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்குள்ள முகாமில் மட்டும் 13 ஆயிரத்து 683 பேர் தஞ்சமடைந்துள்ளனர். #KeralaRain #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கொட்டி வருகிறது. கடந்த 2½ மாதங்களாக பெய்து வரும் இந்த மழை கடந்த 8-ந்தேதி முதல் மிக பலத்த மழையாக பெய்து வருகிறது.

    இந்த மழை காரணமாக வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி, எர்ணாகுளம், கண்ணூர், பாலக்காடு உள்பட 10 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்கள் தீவுகளாக மாறி விட்டன. இந்த மாவட்டங்களில் தான் அணைகள் அதிகம் உள்ளன. அணைகள் நிரம்பியதை தொடர்ந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த வெள்ளம் கரையை தாண்டி ஊருக்குள்ளும் புகுந்து ஓடுகிறது.

    மேலும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் இவை அனைத்தும் சேர்ந்து இந்த 2 மாவட்டங்களையும் வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது. நேற்று பகல் வயநாட்டில் சற்று மழை குறைந்ததால் சில இடங்களில் வெள்ளம் வடிந்தது. இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    ஆனால் மீண்டும் இன்று மழை பெய்ய தொடங்கியதால் தொடர்ந்து வயநாடு கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இங்குள்ள முகாமில் மட்டும் 13 ஆயிரத்து 683 பேர் தஞ்சமடைந்துள்ளனர். மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.



    தெரு எல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை நிலவுகிறது. அதை தொடர்ந்து பொதுமக்களை மீட்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர் தங்குமிடம் போன்றவற்றை உடனடியாக செய்து கொடுக்கவும், மாநில அரசு நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளது. ராணுவத்தின் முப்படைகளும் மீட்புப் பணியில் களம் இறங்கி உள்ளனர்.

    வயநாட்டில் நேற்று ஒரே நாளில் 68.3 மி.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. இங்கு 537 வீடுகள் முழுமையாக இடிந்து தகர்ந்து விட்டது. பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. வயநாட்டில் உள்ள பானாசூரசாகர் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரை புரளுகிறது.

    இடுக்கி அணையின் 5 மதகுகளும் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் அங்கும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது இடுக்கி அணையின் முதல் மற்றும் 5-வது மதகுகள் மூடப்பட்டு உள்ளது. மற்ற 3 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் சற்று வெள்ளம் குறைந்துள்ளது.

    திருவம்பாடி, நிலம்பூர் போன்ற இடங்களில் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏராளமான வீடுகள் இடிந்தன. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. பாலக்காடு, வயநாடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் வெள்ளம் அபாய அளவில் கரை புரண்டு ஓடுகிறது. இங்குள்ள சபரிகிரி அணை பகுதியில் கூடுதல் மழை பெய்துள்ளதால் தொடர்ந்து பம்பை ஆற்றுக்கு வரும் தண்ணீரும் அதிகரித்து வருகிறது. இதனால் பல இடங்களில் பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.

    இதற்கிடையில் சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் இன்று மாலை நிறை புத்தரிசி பூஜைக்காக கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை காலை 6.30 மணிக்கு புது நெற்கதிர்களை வைத்து பூஜைகள் செய்யப்படும். வழக்கமாக சபரிமலையில் நடை திறக்கும்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    தற்போது பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக அய்யப்பப் பக்தர்கள் இங்கு வர வேண்டாம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

    இந்த மழை காரணமாக மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடி சேதமடைந்துள்ளதாக முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கி உள்ள ரூ.100 கோடி போதாது என்றும் முதல் கட்டமாக ரூ.1200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    வரலாறு காணாத பேரழிவை கேரள சந்தித்துள்ளதால் இதுவரை 186 பேர் உயிர் இழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை 27 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் கரை புரளும் வெள்ளம் கரை தாண்டியதால் 10 ஆயரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான சாலைகள் சேதமடைந்துள்ளது.

    இந்த நிலையில் மேலும் 2 நாட்களுக்கு மிகப்பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் கேரள மக்கள் தொடர்ந்து அச்சத்திலேயே இருந்து வருகிறார்கள்.  #KeralaRain #KeralaFloods

    Next Story
    ×