search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி பிறந்தநாள்: கொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு
    X

    காந்தி பிறந்தநாள்: கொலை, கற்பழிப்பு, ஊழல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் - மத்திய அரசு அறிவிப்பு

    மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், கொலை, கற்பழிப்பு, ஊழல் வழக்கு கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. #MahatmaGandhi #PrisonerConvicted
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம், அக்டோபர் 2-ந் தேதி தொடங்குகிறது. இதை ஓராண்டு முழுவதும் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதையொட்டி, சில குறிப்பிட்ட பிரிவு கைதிகளை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    எந்தெந்த கைதிகள் விடுதலை பெற தகுதியானவர்கள், யார் யார் விடுதலை பெற தகுதி அற்றவர்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ், வருகிற அக்டோபர் 2-ந் தேதி, அடுத்த ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி, அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி ஆகிய 3 நாட்களில் கைதிகளை மாநில அரசுகள் விடுதலை செய்யலாம். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    தகுதியான கைதிகள் பட்டியலை ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தயார் செய்யுமாறும், அப்போதுதான் அக்டோபர் 2-ந் தேதி, முதல்கட்ட கைதிகளை விடுதலை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளோம்.



    அதன்படி, 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய திருநங்கை கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண் கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள் ஆகியோர் விடுதலை பெற தகுதியானவர்கள்.

    70 சதவீத உடல்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி கைதிகளில், தண்டனை காலத்தில் பாதியை முடித்தவர்கள், நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்ட கைதிகள் (மருத்துவ குழு சான்றளிக்க வேண்டும்), தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவித்து முடித்தவர்கள் ஆகியோரும் பொது மன்னிப்பு பெற தகுதியானவர்கள் ஆவர்.

    இருப்பினும், கொலை, கற்பழிப்பு, ஊழல் போன்ற வழக்குகளில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள், மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்கள் ஆகியோரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்.

    பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள், தடா, பொடா, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம், வெடிபொருட்கள் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், அரசாங்க ரகசிய சட்டம், கடத்தல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்ற குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள் ஆவர்.

    வரதட்சணை மரணத்துக்காக தண்டனை பெற்றவர்கள், கள்ள நோட்டு வழக்கு, ஆள் கடத்தல், போக்சோ சட்டம், விபசார தடுப்பு சட்டம், சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டம், அன்னிய செலாவணி முறைப்படுத்தும் சட்டம் (பெமா), கருப்பு பணம் மற்றும் வரிவிதிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட தகுதி இல்லாதவர்கள்.

    போதைப்பொருள் தடுப்பு சட்டம், பேரழிவு ஆயுதங்கள் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கும், தேசத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொது மன்னிப்பு கிடையாது.

    மேற்கண்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான கைதிகள் பட்டியலை தயாரிக்க மாநில அளவிலான கமிட்டியை அமைக்குமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளோம். அந்த கமிட்டியின் சிபாரிசுகளை மாநில கவர்னரின் ஒப்புதலுக்காக மாநில அரசுகள் முன்வைக்க வேண்டும். அரசியல் சட்டம், தனக்கு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி, கவர்னர் ஒப்புதல் வழங்குவார்.

    மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்படும் விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வெளிநாட்டு கைதிகளாக இருந்தால், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் விடுதலை செய்யலாம்.

    இவ்வாறு அந்த அதிகாரிகள் கூறினர்.  #MahatmaGandhi #PrisonerConvicted  #tamilnews 
    Next Story
    ×