search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்
    X

    கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும்- வானிலை மையம் தகவல்

    கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம், கடற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் தெற்கு உள்மாவட்டங்களிலும் தெலுங்கானா கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில்  பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதேபோல் பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. #KeralaFloods #KeralaRain
    Next Story
    ×