search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா ஆட்சியை வீழ்த்த அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் - அமித் ஷா சபதம்
    X

    மம்தா ஆட்சியை வீழ்த்த அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் - அமித் ஷா சபதம்

    மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சியை வீழ்த்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் போவேன் என அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah #CongTMCstand
    கொல்கத்தா:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள  நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தி, தொண்டர்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் பிரசார பயணங்களில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா ஈடுபட்டு வருகிறார்.

    கர்நாடகம், ராஜஸ்தான், கேரளா, தமிழ்நாடு என சில மாவட்டங்களின் தலைநகரங்களில் பொதுக்கூட்டங்களை நடத்திய அவர் அடுத்தகட்டமாக மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை குறிவைத்து பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தில் உள்ள மொத்த தொகுதிகளில் சரிபாதியில் வெற்றி பெற்றே தீருவோம் என்ற சூளுரையுடன் கொல்கத்தா நகரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமித் ஷா, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் ஆட்சியை வீழ்த்த மேற்கு வங்காளம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இனிபோய் பிரசாரம் செய்வேன் என குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், ஷியாமா பிரசாத் முகர்ஜி, ரவீந்திரநாத் தாகூர் போன்ற மிகப்பெரிய தலைவர்கள் பிறந்த மேற்கு வங்காளம் மாநிலத்தில் பா.ஜ.க. அரசு அமைக்காமல் இந்த 19 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்றதில் பெருமை இல்லை என நான் கருதுகிறேன். எனவே, இங்கே ஒருமுறை ஆட்சி அமைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.

    ரவீந்திரநாத் தாகூரின் சங்கீதம் கேட்ட இந்த மாநிலத்தில் இப்போது எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு சப்தம் தான் கேட்கிறது.


    மம்தா தலைமையிலான இந்த அரசு துர்கா பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட கூட அனுமதி அளிக்காமல் இந்து மக்களை வஞ்சித்துள்ளது, அடுத்தமுறையும் இது தொடர்ந்தால் மம்தா பானர்ஜியின் தலைமை செயலகத்தை நோக்கி நாங்கள் படை எடுப்போம். உரிய முறையில் அவருக்கு பதிலடி தருவோம்.

    அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட குடிமக்கள் கணக்கெடுப்பில் பெயர்கள் விடுபட்டுபோன 40 லட்சம் வெளிநாட்டினருக்கு ஆதரவாக குரல் எழுப்பிவரும் மம்தா பானர்ஜி, வெளிநாடுகளில் இருந்துவந்து அசாம் மாநிலத்தில் குடியேறிய மக்களின் ஓட்டுவங்கியை குறிவைத்து அரசியல் நடத்துகிறார்.

    சட்டவிரோதமாக இங்கு புகுந்த குடியேறிகள் முன்னர் இந்த மாநிலத்தை ஆட்சி செய்த இடதுசாரிகளை
    ஆதரித்தார்கள் என்பதற்காக 2005-ம் ஆண்டில் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்த மம்தா, தற்போது அவர்களின் ஓட்டுக்காக ஆதரவாக பேச தொடங்கியுள்ளார்.

    குடியேறிகள் பெருகியதால் இந்த மாநிலம் வெடிகுண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாறி விட்டது. இந்த நிலையை நாங்கள் மாற்றுவோம்.  எங்களுக்கு நாடுதான் முக்கியம். குடியேறிகளுடன் எவ்வித சமரசமும் செய்துகொள்ள மாட்டோம்.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள் தொடர்பாக தங்களது நிலைப்பாடு என்ன? என்பதை ராகுல் காந்தியும், மம்தா பானர்ஜியும் தெளிவுப்படுத்தியாக வேண்டும்.

    அசாம் குடிமக்கள் பட்டியலை நாங்கள் நிச்சயமாக அமைதியான முறையில் நிறைவேற்றியே தீருவோம். இந்த நாட்டுக்குள் ஊடுருவிய அனைவரையும் வெளியேற்றியே தீருவோம். மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி யார் வந்தாலும் இதை தடுத்து நிறுத்திவிட முடியாது.

    நாங்கள் இந்த மாநிலத்து மக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மம்தா பானர்ஜியின் சூழ்ச்சி அரசியலைதான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த பொதுக்கூட்டத்துக்கு தடைபோட எத்தனையோ முயற்சிகள் நடைபெற்றன. ஆனால், அவற்றை எல்லாம் முறியடித்து இந்த கூட்டம் இப்போது நடக்கின்றது.

    எனது பேச்சை மக்கள் நேரடியாக கேட்க முடியாத அளவுக்கு மாநிலம் முழுவதிலும் உள்ள தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு சிக்னல்களை மம்தா அரசு முடக்கி, குறைத்துள்ளது.

    ஆனாலும், இந்த பொதுக்கூட்டத்துக்காக வந்துள்ள மக்கள் கூட்டம் விரைவில் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசு தூக்கி எறியப்படும் என்பதற்கான அத்தாட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை பா.ஜ.க. விரட்டி அடிக்கும். இதற்காக இந்த மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் நான் சென்று பேசுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #AmitShah #CongTMCstand 
    Next Story
    ×