search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு - குமாரசாமி
    X

    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு - குமாரசாமி

    மேகதாதுவில் புதிய அணை கட்ட தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளேன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறினார். #MegathathuDam #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. அதனால் இப்போது கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 71 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை(அதாவது இன்று) முதல் இன்னும் அதிகளவில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு வரை திறக்க வேண்டிய நீரை இப்போது திறந்துவிடுகிறோம்.

    ஒரு நாளைக்கு சராசரியாக 10 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தமிழகத்திற்கு செல்கிறது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது. இது யாருக்கும் பயன் இல்லை. அதனால் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    நீர்ப்பாசனத்துறை மந்திரி, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் அனுமதியை கேட்டுள்ளோம். மந்திரி டி.கே.சிவக்குமார் சமீபத்தில் டெல்லியில் மத்திய மந்திரி நிதின்கட்காரியை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசினார். அப்போது இதுபற்றி ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



    மேகதாதுவில் அணை கட்டுவதால் கர்நாடகத்தை விட தமிழகத்திற்கு தான் அதிக பயன் கிடைக்கும். அதனால் கர்நாடகம் தனது சொந்த செலவில் அணை கட்ட தயாராக உள்ளது. நமது விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்றால் மேகதாதுவில் அணை கட்டியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை.

    தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து இதுபற்றி பேசுவேன். அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இதுபற்றி எடுத்துக்கூற நான் தயாராக உள்ளேன். இது தொடர்பாக அவர்களுக்கு கடிதம் எழுதுவேன்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #MegathathuDam  #Kumaraswamy
    Next Story
    ×