search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி
    X

    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

    தமிழக அரசால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்பாயம் அனுமதி அளித்துள்ளது. #Sterlite #SterliteClosureOrder #Vedanta #NGT
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் முறையீடு செய்திருந்தது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் பராமரிப்பு பணிகளை மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் முறையிட்டிருந்தது.



    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க அனுமதி அளிக்கக்கூடாது எனவும், ஆலையால் மாசு ஏற்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆலையை பராமரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், இதற்காக மின்இணைப்பு வழங்கப்படவேண்டும் என்றும் ஸ்டெர்லைட் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தீர்ப்பாயம், ஆலையில் நிர்வாக பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி அளித்தது. மேலும், நிர்வாக ரீதியிலான பணிகளுக்காக ஆலைக்குள் ஸ்டெர்லைட் ஊழியர்களை அனுமதிக்க வேண்டும், ஆலை இயங்காமல் இருப்பதை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆலையில் அமிலக் கசிவை கண்காணிப்பதற்கான தனி அதிகாரியை பரிந்துரைக்க மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அனுமதியும் அளித்தது.

    ஆலையால் மாசு ஏற்படுவதாக கூறும் தமிழக அரசு, அதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அப்போது, மாசு தொடர்பான அறிவியல்பூர்வமான ஆதாரங்களை தாக்கல் செய்வதற்கு 10 நாள் அவகாசம் அளிக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து மாசு தொடர்பான அறிவியல்பூர்வ ஆதாரங்களை ஆகஸ்ட் 20-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

    இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #Sterlite #SterliteClosureOrder #Vedanta #NGT
    Next Story
    ×