search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
    X

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. #SCSTAct #MonsoonSession
    புதுடெல்லி:

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்ட நடைமுறைகள் தொடர்பான ‘ரிட்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதில் குறிப்பிடத்தகுந்த அம்சம், இந்த சட்டத்தின் கீழான வழக்குகளில் குற்றம் சாட்டப்படுகிறவர்களை உடனடியாக கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது ஆகும்.

    மேலும், குற்றம் சாட்டப்படுகிறவர்களை கைது செய்வதற்கு முன்பாக, துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறைவு இல்லாத அதிகாரி கண்டிப்பாக முதல் கட்ட விசாரணை நடத்த வேண்டும்; உரிய உயர் அதிகாரியின் ஒப்புதலை முன்கூட்டி பெற்றுத்தான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்; குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்றாலோ, கோர்ட்டின் பரிசீலனையில் புகாரில் கெட்ட நோக்கம் இருக்கிறது என்று தெரிய வந்தாலோ, குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன்ஜாமீன் வழங்க தடை இல்லை என்று கூறப்பட்டது.

    ஆனால், இந்த உத்தரவுகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்று அரசியல் கட்சிகளும், தலித் அமைப்புகளும் குற்றம் சாட்டினர். இதையொட்டி வட மாநிலங்களில் நடந்த எதிர்ப்பு போராட்டங்களில் வன்முறை வெடித்து, 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில், 1989-ம் ஆண்டு இயற்றப்பட்ட தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏற்கனவே இருந்த கடுமையான விதிகளை மீண்டும் சேர்க்க வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மசோதா இன்று விவாதத்துக்கு பின்னர் நிறைவேறியது. 10-ம் தேதியுடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவேற இருக்கும் நிலையில், நாளை மாநிலங்களவையில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த மசோதாவில் உள்ள அம்சங்களை கீழே பார்க்கலாம்:-

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் (எஸ்.சி. மற்றும் எஸ்.டி. இனத்தவர்) மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழான வழக்கில் குற்றம்சாட்டப்படுகிற நபரை கைது செய்வதற்கு புலனாய்வு போலீஸ் அதிகாரி, உயர் அதிகாரியின் ஒப்புதலை பெறத் தேவை இல்லை.

    வழக்கு பதிவு செய்வதற்கு முதல் நிலை விசாரணை நடத்த வேண்டியது கிடையாது.

    குற்றம் சாட்டப்படுகிறவரை கைது செய்வதா, வேண்டாமா என்பதை தீர்மானிக்கிற பொறுப்பை வழக்கின் புலனாய்வு அதிகாரியிடம் இருந்து எடுக்க கூடாது.

    மேற்கண்ட அம்சங்களுடன், வழக்கு பதிவு செய்வதற்கும், கைது நடவடிக்கை எடுப்பதற்கும் முதல்நிலை விசாரணை நடத்த வேண்டும், உயர் அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும் என்பதெல்லாம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதத்தை ஏற்படுத்தி விடும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

    அத்துடன் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41, ஒரு குற்றம் நடந்து உள்ளது என்று வழக்கின் புலனாய்வு அதிகாரி சந்தேகிப்பதற்கு காரணங்கள் இருந்தாலே, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யலாம் என கூறுகிறது என்பதுவும் கோடிட்டுக் காட்டப்பட்டு உள்ளது.
    Next Story
    ×