search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி காப்பகத்தில் 18 குழந்தைகள் மாயமான வழக்கு - மாவட்ட மாஜிஸ்திரேட் அதிரடி நீக்கம்
    X

    உ.பி காப்பகத்தில் 18 குழந்தைகள் மாயமான வழக்கு - மாவட்ட மாஜிஸ்திரேட் அதிரடி நீக்கம்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 18 குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்மந்திரி, மாவட்ட மாஜிஸ்திரேட்டை நீக்கி உத்தரவிட்டுள்ளார். #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தில் இருந்து 10 வயது சிறுமி தப்பிச் சென்று அப்பகுதியின் பெண்கள் காவல்நிலையத்தை அடைந்து, தங்களது காப்பகத்தில் நடந்துவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

    தினமும் மாலை நேரத்தில் விலை உயர்ந்த கார்களில் வருபவர்களுடன், சிறுமிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் நள்ளிரவில் மீண்டும் காப்பகத்திற்கு அழைத்துவரப்படுவதாகவும் அந்த சிறுமி தனது குற்றச்சாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

    இதையடுத்து, அந்த காப்பகத்துக்கு விரைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 18 சிறுமிகள் மாயமானது கண்டறியப்பட்டது. இதையடுத்து, காப்பகத்தை நடத்தி வந்த கிரிஜா திரிபாதி மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



    இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மாநில அரசு பதவி விலக வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ள மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், டியோரியா மாவட்ட மாஜிஸ்திரேட் உள்பட சில அதிகாரிகளை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் காப்பகம் குறித்து 12 மணி நேரத்துக்குள் முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு அனைத்து மாஜிஸ்திரேட்டுகளுக்கும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் வேண்டுகோள் விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் நிலையில், முதற்கட்டமாக பெண்கள் நலத்துறை செயலாளர் ரேனுகா குமார் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த 2007-ம் ஆண்டு இந்த காப்பகத்தின் மீது வந்த புகாரின் அடிப்படையில் இதன் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கிரிஜா மற்றும் அவரது கணவர் தொடர்ந்து இந்த காப்பகத்தை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பீகார் மாநிலத்திலும் காப்பகத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்புணர்வு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவு கூறத்தக்கது. #DeoriaShelterHomeIncident #Uttarpradesh #YogiAdityanath
    Next Story
    ×