search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன் உறுதி
    X

    எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் முறியடிக்கப்படும்- நிர்மலா சீதாராமன் உறுதி

    எல்லையில் ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்படும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். #NirmalaSitharaman
    பெங்களூரு:

    ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பெங்களூருவில் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட 10 விதமான வளர்ச்சி பணிகளுக்கு ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை கர்நாடக அரசுக்கு வழங்க ஒப்புதல் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து, அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “பாகிஸ்தானில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எல்லையில் ஊடுருவல் முயற்சிகள் அதிகரித்துள்ளதே?” என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

    ஊடுருவலை தடுத்து நிறுத்தி, எல்லையை பாதுகாக்கவே நான் ராணுவ மந்திரியாக இருக்கிறேன். பாகிஸ்தானில் என்ன நடந்தாலும், எங்கள் நிலைப்பாடு மாறாது. எங்கள் பணியை எப்போதும்போல் செய்வோம். ஒவ்வொரு ஊடுருவல் முயற்சியும் முறியடிக்கப்படும்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    நிர்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது:-

    டோக்லாம் பிரச்சினையில் சீனாவிடம் மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பணிந்து விட்டதாக ராகுல் காந்தி கூறி இருக்கிறார். இதுபற்றி நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் விரிவாக பதில் அளித்து இருக்கிறார். அதை மீண்டும் சொல்ல வேண்டியது இல்லை. அவரது கருத்தில் நான் உடன்படுகிறேன்.

    2019-ம் ஆண்டு நடைபெறும் விமான கண்காட்சியை எங்கு நடத்துவது என்பது குறித்து ராணுவத்துறை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதுகுறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

    அவரிடம் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை மதுரையில் இருந்து சென்னைக்கு ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்ற விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    முதலில் நிருபர்கள் கேட்ட கேள்வி தனக்கு புரியாததால், தமிழில் கேட்கும்படி மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார். அதன்படி, தமிழில் கேள்வி கேட்கப்பட்டது.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரரை ராணுவ ஹெலிகாப்டர் ஆம்புலன்சில் அழைத்துச் சென்றது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல் புன்னகைத்துவிட்டு, ‘நன்றி’ எனக் கூறிவிட்டு புறப்பட்டு சென்றுவிட்டார். #NirmalaSitharaman
    Next Story
    ×