search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம் - சட்டமன்றத்துக்கு  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு
    X

    பாராளுமன்றம் - சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை மத்திய சட்ட ஆணையத்திடம் பதிவு செய்தனர். #SimultaneousElections #Congress

    புதுடெல்லி:

    தேர்தல் செலவினங்களை குறைக்கவும், அடிக்கடி தேர்தல் நடைபெறுவதை தவிர்க்கவும் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாமா என்று மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

    இதற்கு தேர்தல் கமி‌ஷன் வரவேற்பு தெரிவித்ததுடன் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்தது. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்களை கேட்டு வருகிறது.

    இதற்கிடையே மத்திய சட்ட கமி‌ஷனும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா? இதில் உள்ள இடர்பாடுகள் என்ன என்பது குறித்தும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டது. இதில் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் சார்பில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை தெரிவிக்க குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், கபில்சிபல், அபிஷேக் சிங்வி, ஆனந்த் சர்மா, ஜெ.டி.சீலம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.


    இந்த குழு ஆலோசனை நடத்தியதில் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் டெல்லியில் சட்ட கமி‌ஷனை நேரில் சந்தித்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய கூட்டாட்சி தத்துவத்துக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது. எனவே காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

    பா.ஜனதா சார்பில் கருத்துக்களை தெரிவிக்க மேலும் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி கட்சிகளிடையேயும் இதில் கருத்து வேறுபாடு உள்ளது. அகாலி தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அ.தி.மு.க. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தாலும் 2025-ம் ஆண்டில் இருந்து இதை அமல்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தி.மு.க., தெலுங்கு தேசம், இடது சாரிகள், ஜெ.டி.எஸ். ஆகிய கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    Next Story
    ×