search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமரை தேர்வு செய்வோம்- காங்கிரஸ் தகவல்
    X

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகே பிரதமரை தேர்வு செய்வோம்- காங்கிரஸ் தகவல்

    பா.ஜனதாவை வீழ்த்த வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், பிரதமர் யார் என்று தேர்தல் முடிவுகளுக்கு பிறகே முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. #ParliamentaryElections #Congress
    புதுடெல்லி:

    நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் பணியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.

    இந்தநிலையில், தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் நேற்று கூறியதாவது:-

    அடுத்த ஆண்டு தேர்தலில், பா.ஜனதாவை வீழ்த்துவதற்கு வலிமையான கூட்டணி அவசியம் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் உணர்ந்துள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுடன் வலிமையான கூட்டணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

    ஒவ்வொரு மாநிலத்திலும், கருத்து ஒற்றுமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு எதிரான கட்சிகளை ஓரணியில் திரட்டுவதுதான் எங்கள் இலக்கு.

    இந்த பணி மூலம் கூட்டணியை முறையாக அமைத்து விட்டால், பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் தோற்கடித்து விடலாம்.



    இருப்பினும், எங்கள் மரபணுவுடன் ஒத்துப்போகாத மரபணு கொண்ட சிவசேனாவுடன் நாங்கள் கூட்டணி சேர முடியாது.

    டெல்லியிலும், பஞ்சாபிலும் ஆம் ஆத்மியுடன் கூட்டணி சேரும் விஷயத்தில், அந்த மாநில காங்கிரசின் கருத்துகளுக்கு முன்னுரிமை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில காங்கிரஸ் கமிட்டியுடன் ஆலோசனை நடத்தித்தான், கூட்டணிகள் இறுதி செய்யப்படும். மாநில காங்கிரசின் நலன்களை பாதுகாப்போம்.

    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடன் பரந்த புரிந்துணர்வு உருவாகி உள்ளது. தொகுதி பங்கீடு பற்றி பேசி வருகிறோம்.

    ராஜஸ்தான், மத்தியபிர தேசம், மராட்டியம், பஞ்சாப், சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும். அதனால், எதிர்க்கட்சி கூட்டணியில், காங்கிரஸ் முக்கிய இடத்தை பிடிக்கும்.

    எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் யார் என்பது தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு முடிவு செய்யப்படும். ஏனென்றால், தேர்தலுக்கு பிந்தைய நிலைமையை இப்போதே பேசினால், அது எதிர்விளைவுகளை உருவாக்குவதுடன், கூட்டணியில் பிளவை உண்டாக்கி விடும்.

    இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநில சட்டசபை தேர்தல்களில், காங்கிரஸ் வெற்றி பெறும். முதல்-மந்திரி வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க மாட்டோம்.

    இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. #ParliamentaryElections #Congress
    Next Story
    ×