search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீனா சாலை அமைத்த விவகாரம்: டோக்லாம் பிரச்சினை தீர்க்கப்பட்டது எப்படி? - மத்திய அரசு விளக்கம்
    X

    சீனா சாலை அமைத்த விவகாரம்: டோக்லாம் பிரச்சினை தீர்க்கப்பட்டது எப்படி? - மத்திய அரசு விளக்கம்

    டோக்லாம் பகுதியில் சீன ராணுவம் சாலை அமைத்த பிரச்சினையை தீர்த்தது குறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவு மந்திரி பதில் அளித்தார். #Doklam #DiplomaticMaturity #SushmaSwaraj
    புதுடெல்லி:

    சிக்கிம் மாநில எல்லையில் இந்தியா-சீனா-பூடான் நாடுகள் சந்திக்கும் பீடபூமி பகுதியான டோக்லாமில் கடந்த ஆண்டு சீனா சாலைப்பணிகளை தொடங்கியது. இது இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி அந்த பணிகளை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.

    இதைத்தொடர்ந்து இருநாடுகளும் அங்கே மாறிமாறி படைகளை குவித்ததால் போர்ப்பதற்றம் உண்டானது. சுமார் 73 நாட்களுக்குப்பின் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு படைகள் வாபஸ் பெறப்பட்டன. மேலும் அந்த பகுதியில் இரு நாடுகளும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி முடிவு செய்யப்பட்டது.

    ஆனால் இந்த முடிவையும் மீறி சீன ராணுவம் அங்கே சாலைப்பணிகளை மீண்டும் தொடங்கி இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்காவும் தகவல் வெளியிட்டு இருந்தது.

    இந்த விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்ற மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுகதா போஸ் துணைக்கேள்வி எழுப்பினார். டோக்லாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் சிலிகுரி பகுதியையும் சீனா நெருங்க முயற்சிப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இந்த கேள்வியை அவர் எழுப்பினார்.

    அவரது இந்த கேள்விக்கு வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘டோக்லாமில் 2017 ஆகஸ்டு 28-ந் தேதி ஏற்படுத்தப்பட்ட நிலைமையில் இருந்து ஒரு அங்குலம் கூட தற்போது மாறவில்லை. அந்த பிரச்சினை ராஜதந்திர முதிர்ச்சியால் தீர்க்கப்பட்டு விட்டது’ என்றார்.

    இதைப்போல சீனாவின் வூகன் நகரில் கடந்த ஏப்ரலில் நடந்த பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இடையிலான முதல் அதிகாரப்பூர்வமற்ற மாநாடு மிகப்பெரிய வெற்றி அடைந்ததாகவும் சுஷ்மா சுவராஜ் கூறினார். இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக நடவடிக்கைகளுக்கு உகந்த சூழல், இரு தலைவர்களுக்கு இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பரஸ்பர நம்பிக்கை ஆகிய 3 மைல்கல் சாதனைகளுக்கு இந்த மாநாடு வழிவகுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    முன்னதாக ஜின்பிங்குடனான இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி.க்களான மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபால், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால் பிரதமர் மோடிக்கு பதிலாக சுஷ்மா சுவராஜ்தான் பதிலளித்தார்.

    அவர் கூறும்போது, ‘இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியும். ஏனெனில் இந்த அதிகாரப்பூர்வமற்ற சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக நான் சீனாவுக்கு சென்று, அந்த நாட்டு வெளியுறவு மந்திரியை சந்தித்து பேசினேன். எனவே அங்கு நடந்தது அனைத்தும் எனக்கு தெரியும்’ என்று தெரிவித்தார்.   #Doklam #DiplomaticMaturity #SushmaSwaraj #Tamilnews
    Next Story
    ×