search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
    X

    ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை விசாரணை அக். 1-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #PChidambaram #KarthiChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் 2006-ம் ஆண்டு மத்திய நிதி மந்திரியாக இருந்தார். அப்போது ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

    சட்ட விதிகளின்படி ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடு திட்டங்களுக்கு மத்திய நிதி மந்திரியின் ஒப்புதல் போதுமானதாகும். ரூ.600 கோடிக்கும் அதிகமான முதலீட்டு திட்டங்களுக்கு பொருளாதார விவகாரங்களுக்கு மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

    இதனால் அந்த குழுவின் ஒப்புதலை பெறாமல் ஏர்செல் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ததற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் மறுத்து இருந்தனர்.

    இந்த வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 17 பேர் மீது டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் சி.பி.ஐ. சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தது. இதேபோல அமலாக்கத்துறையும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    இந்தநிலையில் டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது.

    இதை நீதிபதி ஏற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை அக்டோபர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார். #PChidambaram #KarthiChidambaram  #AircelMaxisCase
    Next Story
    ×