search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசியாக அமர வைக்கப் படுவதற்கு பங்க்ளா என்ற புதிய பெயரால் முடிவு கிடைக்குமா?
    X

    கடைசியாக அமர வைக்கப் படுவதற்கு பங்க்ளா என்ற புதிய பெயரால் முடிவு கிடைக்குமா?

    மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்க்ளா’ என மாற்றம் செய்து அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட வங்காளம், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின் மேற்கு வங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் பங்களாதேஷ் என தனிநாடாக மாறியது.

    மேற்கு வங்காளத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என வருவதால், ஆங்கில அகரவரிசைப்படி மத்திய அரசு கூட்டங்களில் கடைசி இடத்தில் மேற்கு வங்காளத்தின் பிரதிநிதிகள் அமர வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியால் நீண்ட காலமாக கூறப்பட்டது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களிலும் தங்களது சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பேச கடைசியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறி வந்தார்.



    வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்றப்படும் என அவர் 2011-ம் ஆண்டே அறிவித்தார். அறிவித்த கையோடு, அம்மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.

    இந்நிலையில், மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்க்ளா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    ஆனால், மத்திய அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×