search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சந்திரகிரியில் இருந்து திருப்பதிக்கு பைக் பேரணி சென்றனர்.
    X
    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சந்திரகிரியில் இருந்து திருப்பதிக்கு பைக் பேரணி சென்றனர்.

    ஆந்திராவில் முழு அடைப்பு - திருப்பதியில் பக்தர்கள் அவதி

    ஆந்திராவில் இன்று முழு அடைப்பு போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் தரிசனம் முடித்த பக்தர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். #APSpecialStatus #APBandh
    திருமலை:

    ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி ஆந்திர மாநிலத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு சிறப்பு நிதி, சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், மக்களின் நிலைமையை மாற்ற வேண்டும் என ஆந்திர சட்டசபையில் பலமுறை பேச முயன்றார். ஆனால் அவரை பேச விடாமல் மறுத்தனர். இதனை கண்டித்தும் சந்திரபாபு நாயுடு, தேர்தலின்போது மக்களுக்கு இலவச வீட்டுமனை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, சொந்த வீடு, இலவச மின்சாரம், இலவச வேளாண்மைக் கருவிகள் வழங்குவதாக கூறினார். ஆனால் எந்த திட்டமும் முழுமையாக நிறைவேறவில்லை.

    இதனை கண்டித்தும் மாநில அளவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

    அதன்படி இன்று முழு அடைப்பு நடந்தது. திருப்பதி, சித்தூரில் பஸ், ஆட்டோ, வேன், கார்கள் ஓட வில்லை. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடாததால் முக்கிய வீதிகள், ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    திருப்பதியில் இருந்து திருமலைக்கு வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டன. திருமலையில் அனைத்து கடைகளும் திறந்திருந்தன.

    தரிசனம் முடித்த பக்தர்கள் திருமலையில் இருந்து திருப்பதிக்கு பஸ்களில் வந்தனர். ஆனால் திருப்பதியில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வேலூர், சென்னை உள்பட தமிழகத்தில் இருந்த வந்த பக்தர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    இதனால் திருப்பதியில் இருந்து தமிழக பக்தர்கள் ரெயில்களில் ஊருக்கு திரும்பினர். இதனால் ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

    ஆந்திராவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பாஸ்கர ரெட்டி, சித்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    வேலூரில் இருந்து திருப்பதி, சித்தூர், கே.ஜி.எப்., மதனபல்லி, குப்பம் செல்லும் பஸ்கள் ஓடவில்லை.



    ஆந்திரா செல்லும் 32 தமிழக அரசு பஸ்கள், ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 46 ஆந்திர பஸ்கள், 32 தனியார் பஸ்கள் பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு பிறகு ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் ஆந்திரா செல்லும் கார், வேன் உள்பட வாகனங்கள் தமிழக எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. #APSpecialStatus #APBandh

    Next Story
    ×