search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு
    X

    ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை நீக்கம் - சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

    டெல்லி ஜந்தர் மந்தர் திடல் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்ட தடையை இன்று சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார். #KejriwalwelcomesSCorder #JantarMantar
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் மற்றும் இந்தியா கேட் அருகில் உள்ள போட் கிளப் பகுதிகளில் பல்வேறு தரப்பினரின் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழக்கம். அன்னா ஹசாரே உள்ளிட்ட போராட்டக்காரர்கள் பல ஆண்டுகளாக இந்த இடங்களில்தான் தங்களது போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த சிலர் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தனர்.



    இந்த புகாரை விசாரித்த பசுமைத் தீர்ப்பாய நீதிபதிகள், ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்தவும், ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தவும் தடை விதித்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தனர்.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்து தீர்ப்பளித்தது.

    இந்த தீர்ப்பில், போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை. அதை ஒட்டுமொத்தமாக தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. எனவே, ஜந்தர் மந்தர், போட் கிளப், இந்தியா கேட் ஆகிய பகுதிகளில் போராட்டம் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    மேலும், இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசு, டெல்லி காவல்துறை ஆகியோர் இரண்டு வாரங்களுக்குள்ளாக போராட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    டெல்லியை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலமாக மாற்றும் முயற்சி ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. இதை சுப்ரீம் கோர்ட் உரிய முறையில் தகர்த்துள்ளது என தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #KejriwalwelcomesSCorder #JantarMantar #JantarMantarprotests
    Next Story
    ×