search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் அடித்துக் கொலை: முதல்-மந்திரி கடும் கண்டனம்
    X

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் அடித்துக் கொலை: முதல்-மந்திரி கடும் கண்டனம்

    ராஜஸ்தானில் பசுக்களை கடத்தியதாக கருதி வாலிபர் ஒருவரை வன்முறைக் கும்பல் அடித்துக் கொன்றது. இதற்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார்.
    ஜெய்ப்பூர்:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.

    இந்த உத்தரவுக்கு பிறகும் ராஜஸ்தான் மாநிலம் அல்வார் நகர் அருகே பசு பாதுகாவலர்கள் அப்பாவி ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

    அரியானா மாநிலம் கலோகான் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் கான்(வயது 28). இவர் தனது நண்பரான அஸ்லாம் என்பவருடன் 2 பசுக்களை தனது சொந்த ஊருக்கு அல்வார் அருகேயுள்ள லாலாவாண்டி காட்டு்ப் பகுதி வழியாக நேற்று முன்தினம் இரவு ஓட்டிச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர்கள் இருவரும் பசுக்களை கடத்திச் செல்வதாக கருதிய பசு பாதுகாவலர்கள் அமைப்பைச் சேர்ந்த கிராம மக்கள் சிலர் இருவரையும் வழி மறித்து கடுமையாக தாக்கினர்.

    அப்போது அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அக்பர்கான் மட்டும் அவர்களின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதனால் அவரை வன்முறைக் கும்பல் சரமாரியாக தாக்கி அடித்து உதைத்தது.

    இதில் படுகாயம் அடைந்த வாலிபர் அக்பர் கானை சிலர் மீட்டு அருகில் உள்ள ராம்கார் நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். அவருடைய உடல் ராம்கார் அரசு ஆஸ்பத்திரியில் பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. அங்கு அக்பர்கானின் குடும்பத்தினர் விரைந்தனர்.

    இந்த படுகொலை தொடர்பாக ராம்கார் போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 2 பசுக்களும் கிராம மக்களிடம் இருந்து மீட்கப்பட்டன.

    இந்த சம்பவத்துக்கு மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய அத்தனை பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 
    Next Story
    ×