search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த மகாராஷ்டிர அரசு - பால் கொள்முதல் விலை ரூ.25 ஆக நிர்ணயம்
    X

    விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த மகாராஷ்டிர அரசு - பால் கொள்முதல் விலை ரூ.25 ஆக நிர்ணயம்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராடி வந்த நிலையில், விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது. #MaharashtraMilkProtest
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோலாப்பூர், சங்லி, சட்டாரா, புனே ஆகிய மாவட்டங்களில் அம்மாநிலத்தின் மேற்கு பகுதியில் மக்களுக்கு தேவையான பால் உற்பத்தி நடைபெறுகிறது. இதுதவிர, அஹமத்நகர், நாசிக், ஜலகோன், நாண்டெட் மற்றும் பர்பானி மாவட்ட மக்களும் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர்.

    பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பால் 17 ரூபாய்க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. பின்னர், பதப்படுத்தி, குளிரூட்டி பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பால் 42 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த கொள்ளை லாபத்தை சுட்டிக் காட்டிய பால் உற்பத்தியாளர்கள், கொள்முதல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் உயரத்தி தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பால் உற்பத்தியாளர்களிடம் அரசு சார்ந்த கூட்டுறவு நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலையை உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கங்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

    இதற்காக கடந்த 3 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, 1 லிட்டர் பாலின் குறைந்தபட்ச விலை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு ஜூலை 21-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MaharashtraMilkProtest
    Next Story
    ×