search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    5, 8-ம் வகுப்புகளுக்கு அனைவரும் தேர்ச்சி திட்டம் ரத்து - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
    X

    5, 8-ம் வகுப்புகளுக்கு அனைவரும் தேர்ச்சி திட்டம் ரத்து - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்

    5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டத்தை ரத்து செய்வதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. #LokSabha #PrakashJavadekar
    புதுடெல்லி:

    குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம், 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன்படி, 1 முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகள் ‘பெயில்’ ஆக்கப்படாமல், மேல்வகுப்புக்கு அனுப்பப்படுவார்கள். இது, ‘அனைவரும் தேர்ச்சி’ (ஆல் பாஸ்) திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த சட்டத்தில் 2-வது தடவையாக திருத்தம் செய்வதற்கான மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதை தாக்கல் செய்தார்.



    அப்போது அவர் பேசியதாவது:-

    2009-ம் ஆண்டின், கல்வி உரிமை சட்டம், 8-ம் வகுப்புவரை மாணவர்களை ‘பெயில்’ ஆக்குவதை தடை செய்கிறது. அதில் திருத்தம் செய்வதற்காக இம்மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் வழக்கமான தேர்வு நடத்தப்படும். அதில் தோல்வி அடையும் மாணவ-மாணவிகளுக்கு 2 மாதங்கள் கழித்து மறுதேர்வு நடத்தப்படும்.

    அந்த மறுதேர்விலும் தேர்ச்சி அடையாத மாணவ-மாணவிகளை ‘பெயில்’ ஆக்கி, மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதன்மூலம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ‘அனைவரும் தேர்ச்சி’ திட்டம் ரத்து செய்யப்படுகிறது.

    பின்னர், மசோதா மீது நடந்த விவாதத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் மசோதாவை ஆதரித்து பேசினார். “எப்படி படித்தாலும் மேல்வகுப்புக்கு அனுப்புவதால், மாணவர்களுக்கு படிப்பு மீது ஆர்வம் குறைகிறது. அதே சமயத்தில், தொடக்க கல்வியானது, சமூக, உள்ளூர் கலாசார பின்னணியில் அமைய வேண்டும். எனவே, அதை மாநிலங்களிடமே விட்டுவிட வேண்டும்” என்று அவர் கூறினார்.

    காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் பேசுகையில், தோல்வி அடைந்த மாணவர்களுக்கான மறுதேர்வை மத்திய அரசு நடத்துமா? மாநில அரசு நடத்துமா? என்பதில் தெளிவு இல்லை என்று கூறினார்.

    பார்த்ருஹரி மஹதாப் (பிஜு ஜனதாதளம்), சவுகதா ராய் (திரிணாமுல் காங்கிரஸ்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), பிரேம்சிங் சாந்துமஜ்ரா (அகாலிதளம்) ஆகியோரும் மசோதாவை ஆதரித்து பேசினர்.  #LokSabha #PrakashJavadekar #tamilnews 
    Next Story
    ×